Enter your Email Address to subscribe to our newsletters

இந்தூர் , 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில், சமூக வலைத்தளங்களில் லைக்குகளை குவிப்பதற்காக சாலையின் நடுவே ஜீப்ரா கிராசிங்கில் படுத்துக்கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தூர் நகரில் உள்ள லான்டர்ன் சதுக்கம் பகுதியில் பரபரப்பான போக்குவரத்து சிக்னல் உள்ளது. சம்பவத்தன்று சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால் வாகனங்கள் அனைத்தும் நின்றுகொண்டிருந்தன.
அப்போது பிரகிருதி கவுர் என்ற சமூக வலைத்தள இன்ப்ளூயன்சர், திடீரென சாலையின் நடுவே உள்ள ஜீப்ரா கிராசிங்கில் படுத்துக்கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
சாலையில் படுத்தபடி அவர் பல்வேறு விதங்களில் போஸ் கொடுத்தார். இதனை அங்கிருந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியுடன் பார்த்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் கூறி போலீசார் பிரகிருதி கவுர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வருத்தம்
போலீசார் வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து பிரகிருதி கவுர் மற்றொரு வீடியோவை வெளியிட்டார்.
அதில், சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தபோது வாகனங்கள் நின்றிருந்த சில நொடிகளில் மட்டுமே அந்த வீடியோவை எடுத்ததாகவும், வேண்டுமென்றே போக்குவரத்து விதிகளை மீறும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் கூறினார். மேலும், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் பிரபலமடைவதற்காக பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA