Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
மதுரை வாடிப்பட்டியில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது,
நடந்து முடிந்த தேர்தலில் திமுகவை மக்களே பழிவாங்கி விட்டனர். அவர்களை நாங்கள் ஏன் தனியாக பழிவாங்க வேண்டும்?
இத்தனை ஆண்டுகளில் நீங்கள் என்னென்ன கொள்ளை அடித்தீர்கள்? என்னென்ன செய்தீர்கள்? என்பதைப் பார்த்த மக்களே, உங்களைத் தூக்கி வெளியில் போட்டு விட்டார்கள்.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தீய சக்தி திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கூறினர். அதற்காகத்தான் அந்தக் கட்சியையே (அதிமுக) தொடங்கினர். ஆனால், தற்போது திமுகவை விஜய் ஒழித்துக் கட்டி விட்டார்.
இனிமேல், அறிவாலயத்தை வெள்ளையடித்து, வாடகைக்குத்தான் விட வேண்டும்.
முரசொலி அறக்கட்டளைக்குத்தான் அவர்களுக்கு இவ்வளவு போட்டி. அதில்தான் சொத்துகள் அனைத்தும் உள்ளன. அந்த அறக்கட்டளையை யார் எந்த குடும்பம் கைப்பற்றுகிறது? என்பதுதான் போட்டி.
அறக்கட்டளையைக் கைப்பற்றிவிட்டு, அறிவாலயத்தை வாடகைக்கு விட்டுவிட்டு, வேறு வேலையைப் பார்க்கச் சென்று விடுவர்.
இது (தவெக) மக்களுக்கான அரசு. ஒவ்வோர் ஆண்டும் உங்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும். வரும் 5 ஆண்டுகளில் நிச்சயமாக ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவோம். என்று தெரிவித்தார்.
அமைச்சர் நிர்மல் குமாரின் இந்த கடுமையான விமர்சனத்திற்கு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில்,
நிர்மல் குமார் சொல்லும் வருங்காலத்தில், அவர் எந்தக் கட்சியில் இருப்பார் என்று அவருக்கே தெரியாது என சாடியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b