Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவினரை விமர்சிக்கும் வகையில் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளியான கார்ட்டூனுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தொண்டர்களுக்கு எதிராக விகடன் குழுமம் தொடர்ந்து வன்மத்துடனும், காழ்ப்புணர்ச்சியுடனும் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
‘ஆனந்த விகடன்’ இதழின் இந்த வார பதிப்பில், பிரதமர் மோடி உரையாற்றுவதைப் போன்றும், அவருக்கு முன்பு அமர்ந்திருக்கும் மக்கள் அனைவரும் மூளை இல்லாதவர்கள் என்பதைப் போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ள கார்ட்டூன் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
“கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் வரையலாம் என்ற ஆணவம் ஏற்கத்தக்கதல்ல” என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் பிரதமர் மோடிக்கு கைவிலங்கு இடப்பட்டது போன்ற கார்ட்டூனை வெளியிட்ட அதே நபர் இந்த கார்ட்டூனையும் வரைந்திருப்பதாக தெரிகிறது என்றும், இது பிரதமர் மற்றும் பாஜக மீதான உள்நோக்கத்துடன் கூடிய வன்மத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பிரதமரையும், பாஜகவையும் இழிவுபடுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக விகடன் குழுமத்தை விமர்சித்துள்ள நயினார் நாகேந்திரன், “இந்த அருவருப்பான கார்ட்டூனை வெளியிட்டதற்காக விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் உரிய மன்னிப்பு கோரப்படாவிட்டால், சட்டப்படியும் ஜனநாயக முறையிலும் கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ