Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் எம். தங்கராஜ், தனது சொந்த செலவில் ரூ.2 லட்சம் மதிப்பில் பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்தியதுடன், பொதுமக்கள் பங்களிப்புடன் ஸ்மார்ட் வகுப்பறையையும் உருவாக்கியுள்ளார்.
கிராமப்புற மற்றும் தலித் சமூகங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களுக்காக கதை சொல்லுதல், ஃபிளாஷ் கார்டுகள், ஆடியோ-விஷுவல் கருவிகள் உள்ளிட்ட செயல்வழிக் கற்றல் முறைகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தி வருகிறார்.
மேலும், மாணவர் அமைச்சரவை மூலம் காய்கறித் தோட்டம் அமைத்து, அதன் விளைபொருட்களை சத்துணவுக்கு பயன்படுத்தும் நடைமுறையையும் செயல்படுத்தி வருகிறார்.
மதுரை திருப்பரங்குன்றம் PM SHRI கேந்திரிய வித்யாலயா எண்.2 பள்ளி முதல்வர் ஜெ. அமுதா, கேந்திரிய வித்யாலயா அமைப்பில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.
முன்னாள் NCC மாணவியான இவர், மாணவர்களிடையே சமூகப் பொறுப்புணர்வை வளர்த்து வருவதுடன், அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளைத் தத்தெடுத்து கற்றல் வாய்ப்புகள் மற்றும் நவீன கற்பித்தல் முறைகளை பகிர்ந்து வருகிறார். முதியோர் இல்லங்களிலும் சேவையாற்றி வருகிறார்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் வி.வி.ஆர்.எஸ் அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் எஸ். கணேசன், 34 ஆண்டுகால கல்விச் சேவையில் அறிவியல் பாடத்தை நாடகம், விளையாட்டு மற்றும் நவீன டிஜிட்டல் கருவிகளுடன் இணைத்து கற்பித்து வருகிறார்.
வாட்ஸ்அப், ஸ்மார்ட் இன்டராக்டிவ் டிவி, கூகுள் பார்ம்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதுமையான கற்பித்தல் முறைகளை செயல்படுத்தி வருகிறார். ஏற்கனவே மாநில மற்றும் சர்வதேச நல்லாசிரியர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இந்த மூன்று ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான கல்விச் சேவையைப் பாராட்டியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், தேசத்தின் எதிர்காலமான மாணவர்களைச் செதுக்கும் அவர்களின் தன்னலமற்ற பணி மென்மேலும் சிறந்து தொடர மனமார வாழ்த்துவதாக தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam