பழனியில் ஆம்னி பேருந்தில் குட்கா கடத்தல் – கைதான 3 பேருக்கு நீதிமன்றக் காவல்
திண்டுக்கல், 23 ஆகஸ்ட் (ஹி.ச.) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பழனிக்கு வந்த ஆம்னி பேருந்தில் குட்கா பொருட்கள் மறைத்து கடத்தி வரப்படுவதாக பழனி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பழனி நகர் காவல் ஆய்வாளர் தங்க முனுசாமி தலைம
Gutkha


திண்டுக்கல், 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பழனிக்கு வந்த ஆம்னி பேருந்தில் குட்கா பொருட்கள் மறைத்து கடத்தி வரப்படுவதாக பழனி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பழனி நகர் காவல் ஆய்வாளர் தங்க முனுசாமி தலைமையிலான போலீசார், பழனிக்கு வந்த ஆம்னி பேருந்தை தடுத்து நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பேருந்தின் ஸ்டெப்னி டயருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மூட்டை குட்கா பொருட்களை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஈரோட்டை சேர்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் ராமமூர்த்தி, குட்காவை வாங்கி பழனி பகுதியில் விற்பனை செய்ததாக கூறப்படும் மார்க்கண்டேயன் தெருவை சேர்ந்த ரகுமானுல்லா,மற்றும் அவரது மகன் ரியாஸ்தீன், ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, பழனி பகுதியில் யாருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், குட்கா பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆம்னி பேருந்தையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவர்களை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பழனி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN