Enter your Email Address to subscribe to our newsletters

சிவகாசி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
சிவகாசியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக ஆட்சியின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பங்கேற்று, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அவருக்கு கட்சி நிர்வாகிகள் வீர வாள் பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீர்த்தனா,
மக்கள் மத்தியில் தன்னை கொண்டு சேர்த்ததில் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தொண்டர்களின் பங்கு முக்கியமானது என்றார். தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்குப் பிறகும் தன்னைப் பற்றி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதாகக் கூறிய அவர், மக்கள் சேவை செய்ய வந்த தங்களை செயல்பட விடாமல் விமர்சனங்களை முன்வைப்பதே எதிர்க்கட்சிகளின் வேலையாக உள்ளது என குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறிய அமைச்சர், இதன் மூலம் மக்கள் சட்டமன்ற நடவடிக்கைகள், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் அரசு மேற்கொள்ளும் பணிகளை நேரடியாக அறிந்து கொள்ள முடியும் என்றார். 2021-ம் ஆண்டு தேர்தலில் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவதாக திமுக வாக்குறுதி அளித்தும் அதை செயல்படுத்தவில்லை என்றும் விமர்சித்தார்.
தேர்தலுக்கு முன்பு தவெக ஆட்சிக்கு வராது என விமர்சித்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியையும் அமைச்சர் கடுமையாக விமர்சித்தார்.
“சின்ன பிள்ளைகளிடம் விளையாடி விட்டோம்” என்பதை அவர் தற்போது தெரிந்து கொண்டிருப்பார் என கூறினார்.
தன்னைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்களுக்கும் அமைச்சர் பதிலடி கொடுத்தார். ஒரு பெண் அரசியலுக்கு வரக்கூடாதா, கோட் சூட் அணியக்கூடாதா, ஆங்கிலத்தில் பேசக்கூடாதா என கேள்வி எழுப்பிய அவர், சாதாரண மக்களுக்கும் கோட் சூட் அணியும் உரிமை உள்ளது என்றார்.
தான் வெளியிட்ட ரீல்ஸ் மற்றும் ஆடை தொடர்பான வீடியோக்களை வைத்து அரசியல் விமர்சனம் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.
அரசுப் பள்ளிகளில் தான் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்தும் விளக்கம் அளித்த அமைச்சர், பொதுமக்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தார்.
ஆசிரியர் பற்றாக்குறை, கழிவறை பராமரிப்பு உள்ளிட்ட குறைகள் இருந்ததாகவும், ஆய்வு செய்த பள்ளியை சீரமைக்க தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து ஒரு பகுதியை ஒதுக்கியுள்ளதாகவும் கூறினார்.
பள்ளி மாணவிகளை தொந்தரவு செய்ததாகவும், அழ வைத்ததாகவும் பரப்பப்பட்ட தகவல்கள் பொய்யானவை என ஆவேசமாக தெரிவித்தார்.
தன்னைப் பற்றிய பழைய வீடியோக்களை தற்போதைய வீடியோக்களுடன் இணைத்து அவதூறாக பரப்புவதாகவும், திமுக மற்றும் அதிமுகவினர் தன்னை குறிவைத்து செயல்படுவதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.
இரு கட்சிகளும் இணைந்து தமிழக வெற்றி கழக ஆட்சியை கவிழ்க்க நினைத்தாலும் அது நடைபெறாது என்றும் தெரிவித்தார்.
100 நாள் ஆட்சியில் ஊழலற்ற நிர்வாகம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், பட்டாசு ஆலைகளில் முன்பு லஞ்சம் பெறப்பட்டதாகவும், தற்போது எந்தவித லஞ்சமும் இல்லாமல் 1,303 பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்தியை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தன்னுடன் இருப்பவர்கள் யாரும் லஞ்சம் வாங்க மாட்டார்கள் என்றும், யாராவது பணம் கேட்டால் தன்னிடம் புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.
மேலும், நான் ரூ.4 கோடியில் வீடு வாங்கிவிட்டதாக சொல்கிறார்கள். எனக்கே தெரியவில்லை.
நான் ரூ.4 கோடியில் வீடு வாங்கியதற்கான பத்திரத்தை யார் என்னிடம் வந்து கொடுக்கிறார்களோ, அவர்களுக்கே அந்த வீட்டை பரிசாக கொடுத்து விடுகிறேன்” என அமைச்சர் கீர்த்தனா சவால் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக வெற்றி பெற வேண்டும் என்றும், “குட்டி ஜப்பான்” என அழைக்கப்படும் சிவகாசி மக்களின் ஆதரவை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்றும் கட்சியினரிடம் கேட்டுக்கொண்டார்.
Hindusthan Samachar / GOKILA arumugam