Enter your Email Address to subscribe to our newsletters

கோவை , 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ-&இந்தியன் மேல்நிலைப் பள்ளி, தனது நீண்டகாலக் கல்விப் பாரம்பரியம் மற்றும் மாணவர்களின் சாதனைகளை முன்னிலைப்படுத்தும் வகையில் தனது 164-வது ஆண்டு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியது. பள்ளிப் பாடலுடன் விழா தொடங்கியது.
மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய இந்நிகழ்ச்சியில் ஸ்டேன்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் மெர்சி ஓமன், தாளாளர் பிலிப் ஆர்.ஜே. ஃபவுலர், சுசிதா ராமச்சந்திரன் (நிர்வாகக்குழு உறுப்பினர்) தலைமை நிர்வாக அதிகாரி வி.எம்.ஜான், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பி.ஏ.ஜான் ஸ்டீபன், ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ஐலீன் ஜெத்ரோ, ஸ்டேன்ஸ் ஐசிஎஸ்இ பள்ளி முதல்வர் ஜெனட் ஜெயப்பிரகாஷ் மற்றும் ஸ்டேன்ஸ் சர்வதேசப் பள்ளி முதல்வர் ஜார்ஜினா, முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ராஜ்குமார், டி.ஸ்டேன்ஸ் அண்ட் கம்பெனியின் முழுநேர இயக்குநர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கேஎம்சிஎச் மருத்துவமனையின் மூத்த மனநல ஆலோசகரும், நேர்மறை உளவியல் சிகிச்சை (Positive Psychotherapy) நிபுணருமான டாக்டர் சீனிவாசன் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்வில் உரையாற்றிய அவர், மாணவர்களிடையே சுதந்திரம், ஒழுக்கம், உணர்வுசார் நல்வாழ்வு மற்றும் பொறுப்பான வளர்ச்சி ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.
உண்மையான சுதந்திரம் என்பது விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாத நிலை அல்ல என்றும், அது வெளிப்புறக் கட்டுப்பாட்டிலிருந்து சுயக் கட்டுப்பாட்டை நோக்கிய மாற்றம் என்றும் டாக்டர் சீனிவாசன் கூறினார்.
சுதந்திரமானது பொறுப்புணர்வு மற்றும் சுய ஒழுக்கத்துடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இவ்விழாவில் முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA