ஆட்டோ, கேப் டிரைவர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் - போக்குவரத்துத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் வேண்டுகோள்
ஐதராபாத் , 23 ஆகஸ்ட் (ஹி.ச.) தெலுங்கானாவில் நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ள ஆட்டோ, கேப் மற்றும் பள்ளி வேன் டிரைவர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் வேண்டுகோள் வி
A


ஐதராபாத் , 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

தெலுங்கானாவில் நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ள ஆட்டோ, கேப் மற்றும் பள்ளி வேன் டிரைவர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது :

ஆட்டோ, கேப் டிரைவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசு உறுதியாக உள்ளது.

வேலைநிறுத்தம் செய்வதால் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது. எனவே, டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.

கட்டண உயர்வு

ஆட்டோ டிரைவர்களின் முக்கிய கோரிக்கையான கட்டண உயர்வு குறித்து அரசு சாதகமாக பரிசீலித்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படவில்லை.

தற்போது எரிபொருள் மற்றும் வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், கட்டணத்தை மாற்றுவது குறித்து ஆய்வு செய்ய விரைவில் சிறப்புக்குழு அமைக்கப்படும்.

இந்த குழுவில் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் ஆட்டோ தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளும் இடம்பெறுவார்கள்.

அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து, கட்டண திருத்தம் தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும்.

நலவாரியம்

ஆட்டோ தொழிலாளர்களின் நலனுக்காக தனி நலவாரியம் அமைக்க மாநில அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நலவாரியம் செயல்படுவதற்கான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் விரைவில் இறுதி செய்யப்படும்.

கிராமப்புறங்களில் பணியாற்றும் ஆட்டோ டிரைவர்களின் பிரச்சினைகளையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மின்சார ஆட்டோக்களுக்கு உதவி

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், பழைய பெட்ரோல் மற்றும் டீசல் ஆட்டோக்களை ஸ்கிராப் செய்துவிட்டு புதிய மின்சார ஆட்டோக்களை வாங்கும் டிரைவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை மற்றும் தேவையான உதவிகளை வழங்கும்.

மேலும், பழைய வாகனங்களை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கான ‘ரெட்ரோஃபிட்டிங்’ திட்டமும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

ஆட்டோ தொழிலாளர்களின் பிரச்சினைகளை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதால், வேலைநிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று அமைச்சர் பொன்னம் பிரபாகர் மீண்டும் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA