Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 23 ஆகஸ்ட் (H.S.)
தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி அகழாய்வில் கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நடுகல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
மலையடிப்பட்டியில் படிக்கட்டுடன் கூடிய சங்ககாலச் செங்கல் கிணற்றில் இருந்து இந்த நடுகல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழி எழுத்து முறையிலிருந்து வட்டெழுத்தாகத் தமிழ் வரிவடிவம் உருமாறிய காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக்கல்வெட்டில், “கருக்கண் சுளகன் நன்னங்கொடியன்” என்ற பெயர் இடம்பெற்றுள்ளதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
புலிமான் கோம்பை, ஆப்பனூர், மல்லிகாபுரம் உள்ளிட்ட இடங்களில் கிடைத்த நடுகற்களைப் போல வீரரின் உருவம் பொறிக்கப்படாமல், எழுத்தின் வாயிலாகவே அவரது நினைவு பதிவு செய்யப்பட்டிருப்பது சிறப்புக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கல்வெட்டு, அக்காலத் தமிழர்களின் எழுத்தறிவு, வீர மரபு மற்றும் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய வரலாற்றுச் சான்றாக அமைந்துள்ளதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் தமிழர் மண்ணில் நிலைத்திருக்கும் இதுபோன்ற கல்வெட்டுகள், தமிழரின் தொன்மையையும் தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தையும் உலகிற்கு எடுத்துரைக்கும் பெருமைமிகு வரலாற்றுப் பக்கங்களாகத் திகழ்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam