Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சித்து, தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “குறைப்பிரசவம் போல் தேர்தலில் வெற்றி பெற்ற தவெகவை ஆளுநர் இங்குபேட்டரில் வைத்து காப்பாற்றியதால், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரி கட்சிகளின் துணையோடு விஜய் ஆட்சி அமைத்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்ட பாஜக ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருவது நம்பிக்கை துரோகம் இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி தகுதியற்றவர் என்றும், அடுத்த பிரதமர் விஜய் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருவர் பேசியபோது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மேஜையைத் தட்டி ரசித்ததாகவும் அப்பாவு விமர்சித்துள்ளார்.
விஜய்க்கு தேசிய அரசியல் ஆசையை ஏற்படுத்தி, அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து அகற்றி அந்த இடத்தை பிடிக்க அவருடன் இருக்கும் சிலரின் திட்டம் குறித்து விஜய் அறிந்திருக்கிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தவெக ஆட்சியில் தனியார் மருத்துவமனையில் நோயாளி உயிரிழந்தால் மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லை, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உடனடி மரண தண்டனை, கோவில் உண்டியல் வருவாயில் கல்விக்கூடங்கள் கட்டப்படுகின்றன போன்ற பொய்யான தகவல்கள் வடமாநிலங்களில் இந்தியில் ரீல்ஸ் மூலம் பரப்பப்படுவதாகவும் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.
பல நூறு கோடி ரூபாய் செலவில் இத்தகைய பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாகக் கூறிய அவர், போலி கணக்குகள் மூலம் பொய் ரீல்ஸ்களை பரப்புவோர் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க மக்கள் தயாராகி வருவதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P