Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஆகஸ்ட் (ஹி.ச)
காரைக்குடியில் நடைபெற்ற லட்சிய ஜனநாயகக் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்,
தமிழக அரசியல், தவெக அரசு மற்றும் திமுக குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
திமுகவின் ஊழல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, 100 நாட்களைக் கடந்தும் இதுவரை குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
திமுகவுக்கும் தவெகவுக்கும் ரகசிய நட்புறவு இருப்பதாகவும், அதன் காரணமாகவே திமுகவினர் காப்பாற்றப்படுவதாகவும் கூறிய அவர்,
தவெக திமுகவின் 2.0-வாக மாறிவிடுமோ என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது என்றார்.
மேலும், லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க முதல்வர் விஜய் முயற்சி மேற்கொள்வதாகத் தெரிந்தாலும், அதைத் தடுக்கும் வகையில் தவெகவில் சிலரால் இரண்டாவது அதிகார மையம் உருவாகி வருவதாகவும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் விமர்சித்தார்.
தமிழக சட்டப்பேரவை செயல்பாடுகள் குறித்து பேசிய அவர்,
சட்டப்பேரவையில் அமைச்சர்கள் சிறு பிள்ளைகள் போல் சண்டையிட்டுக் கொண்டிருப்பதாக விமர்சித்தார்.
அதேநேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு உண்மையிலேயே சீர்குலைந்துவிட்டது எனக் கூறினார்.
கடந்த ஆட்சியைப் போலவே தற்போதைய ஆட்சியிலும் காவல் மரணங்கள் அதிகமாக நடைபெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
லட்சிய ஜனநாயகக் கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசிய அவர்,
தவெகவிடமும் அண்ணாமலையிடமும் மாற்றத்தை எதிர்பார்த்ததைப் போல தற்போது இளைஞர்கள் தங்கள் கட்சியிடமும் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
திமுகவை விமர்சித்த அவர், “திமுக இளைஞர்களின் கட்சி” என்று கூறப்பட்ட நிலையில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் வயது முதிர்ந்த நிலையிலும் அரசியலில் தொடர்வதாகக் குறிப்பிட்டார்.
திராவிடக் கட்சிகளுடனோ அல்லது தற்போதைய ஆளும் கட்சியான தவெகவுடனோ கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை என்றும், “நாங்கள் தனித்துச் செயல்பட முடிவு செய்துள்ளோம் என்றும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் லட்சிய ஜனநாயகக் கட்சி களமிறங்கத் தயாராக இருப்பதாகவும், தங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது லட்சிய ஜனநாயகக் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ