Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
வார விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பிய ஆயிரக்கணக்கான வாகனங்களால், உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரண்டு நாட்கள் வார விடுமுறை என்பதால், சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் சொந்த ஊர்களுக்குச் சென்று விடுமுறையை கழித்தனர். விடுமுறை முடிந்த நிலையில், இன்று அவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
இதனால் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவிந்தன. இதன் காரணமாக திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுங்கச்சாவடியை கடக்க முடியாமல் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நெரிசலைக் குறைக்கும் வகையில் சுங்கச்சாவடி நிர்வாகம் எதிர்திசையில் உள்ள ஒரு வழித்தடத்தை சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்தில் வாகனங்களை ஒழுங்குபடுத்தி நெரிசலைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கவும் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam