Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்தியாவில் சர்க்கரை விலை கடந்த சில நாட்களில் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆகஸ்ட் 2-ஆம் தேதி கிலோ ரூ.45 ஆக இருந்த சர்க்கரையின் சராசரி சில்லறை விலை, ஆகஸ்ட் 20-ஆம் தேதி ரூ.68.50 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் தாக்கம் தேநீர், காபி உள்ளிட்ட அன்றாடப் பொருட்களின் விலையிலும் வெளிப்படத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு சர்க்கரை உற்பத்தி குறைவு, பருவநிலை பாதிப்பு, பண்டிகைக் கால தேவை அதிகரிப்பு, உலகளாவிய சர்க்கரை பற்றாக்குறை மற்றும் பதுக்கல் உள்ளிட்டவை விலை உயர்வுக்கான காரணங்களாக கூறப்பட்டாலும், ஒன்றிய அரசின் எத்தனால் கொள்கை குறித்தும் வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை இந்தியா 2025-ஆம் ஆண்டிலேயே எட்டியுள்ள நிலையில், கரும்பிலிருந்து சர்க்கரை உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டிய அளவு மூலப்பொருட்கள் எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடப்படுவதால் சர்க்கரை விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அக்டோபர் 31-ஆம் தேதி வரை 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு அனுமதித்திருப்பது தற்காலிக நிவாரணத்தை அளிக்கலாம் என்றாலும், உலகின் முக்கிய சர்க்கரை ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா தற்போது இறக்குமதியை நாடும் நிலைக்கு சென்றிருப்பது அரசின் கொள்கைத் திட்டமிடல் குறித்து கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, சர்க்கரை விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்துவதுடன், பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்களுக்கு தேவையான அளவு சர்க்கரையை நியாயமான விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், எத்தனால் உற்பத்திக்காக கரும்பு மற்றும் சர்க்கரை மாற்றப்படுவதன் தாக்கத்தை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், எரிசக்தி பாதுகாப்புக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைப் போலவே உணவுப் பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P