Enter your Email Address to subscribe to our newsletters

நூஜிவீடு , 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
விவசாயத்தை வெறும் வாழ்வாதாரமாக பார்க்காமல், பொருளாதார சக்தியாக மாற்ற வேண்டும். விவசாயிகள் தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும் என்பதே தங்கள் அரசின் நோக்கம் என்று ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறினார்.
நூஜிவீடு அருகே முசுனூரில் கௌர்மே பாப்கார்ன் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனுடன் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.
அப்போது இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட நான்ஜிஎம்ஓ பாப்கார்ன் கலப்பின விதையை இருவரும் அறிமுகப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு பேசுகையில் கூறியதாவது:-
ஒரு காலத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட பாப்கார்ன் விதைகளுக்காக செலவிடப்பட்ட பணத்தில் 70 சதவீதத்துக்கும் அதிகமான தொகை பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றது. தற்போது கௌர்மே நிறுவனத்தின் முயற்சியால் அந்த வருவாயின் பெரும்பகுதி இந்திய விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கௌர்மே நிறுவனம், 11 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது.
8 மாநிலங்களில் 17,500 விவசாயிகளுடன் இணைந்து 40 ஆயிரம் ஏக்கரில் பாப்கார்ன் சாகுபடி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் 3,400 சினிமா தியேட்டர்களுக்கு பாப்கார்ன் வினியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு 125 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.1,000 கோடிக்கு மேல்) அன்னியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாப்கார்ன் சந்தையில் 69 சதவீத பங்கை பெற்றிருப்பது பாராட்டுக்குரிய சாதனையாகும்.
மதிப்பு கூட்டுதல்
ஆந்திராவில் ஆக்குவா, வாழை, மாம்பழம், மிளகாய், மஞ்சள், பாமாயில் உள்ளிட்ட ஏராளமான வணிகப் பயிர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த விளைபொருட்களை வெறுமனே விற்பனை செய்யாமல், பதப்படுத்தி, அதற்கு மதிப்பு கூட்டி, சொந்த பிராண்டை உருவாக்கி சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் வருமானம் பெருமளவில் உயரும்.
கௌர்மே நிறுவனம் விவசாய நிலத்தில் இருந்து நுகர்வோர் வரை விளைபொருட்களின் முழுமையான கண்காணிப்பு முறையை உருவாக்கியுள்ளது.
இதுபோன்ற நடைமுறையை மற்ற வேளாண் பொருட்களுக்கும் செயல்படுத்த வேண்டும்.
ஆந்திராவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆக்குவா பொருட்களில் தற்போது சுமார் 10 சதவீதம் மட்டுமே பதப்படுத்தப்படுகிறது.
இதனை 60 முதல் 70 சதவீதமாக உயர்த்தினால் வேலைவாய்ப்புகளும், அன்னியச் செலாவணியும் கணிசமாக அதிகரிக்கும்.
இளைஞர்களுக்கு அழைப்பு
இளைஞர்கள் வேலைக்காக காத்திருப்பவர்களாக இல்லாமல், மற்றவர்களுக்கு வேலை வழங்கும் தொழில்முனைவோர்களாக மாற வேண்டும்.
விவசாயத்துடன் தொழில்நுட்பத்தை இணைத்து உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்க முடியும். கௌர்மே நிறுவனத்தின் புதிய சிந்தனையும் செயல்பாடும் இளைஞர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது.
இதுபோன்ற புதிய தொழில் முயற்சிகளுக்கு அரசு முழு ஆதரவு அளிக்கும்.
நீர்ப்பாசன திட்டங்கள்
மாநிலத்தில் நீர் பாதுகாப்புக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. பட்டிசீமா திட்டத்தின் மூலம் கோதாவரி நீரை கிருஷ்ணா டெல்டா பகுதிக்கு கொண்டு சென்று விவசாயிகளுக்கு உதவ முடிந்தது.
நூஜிவீடு பகுதியின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய சிந்தலபூடி லிப்ட் பாசனத் திட்டத்தை சட்டரீதியான தடைகள் நீக்கப்பட்டு விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட வெலிகொண்டா திட்டத்தின் முதல் கட்டம் ஆகஸ்டு 31-ந் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.
கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, பெண்ணா, காவிரி ஆகிய நதிகளை இணைத்தால் தென்னிந்திய மாநிலங்களின் நீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும். இதேபோல் கங்கை–பிரம்மபுத்திரா நதிகளின் நீரையும் முறையாக பயன்படுத்தினால் நாட்டின் வளர்ச்சி மேலும் வேகமடையும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கவர்னர் அப்துல் நசீர், அமைச்சர்கள் நாரா லோகேஷ், அச்சென்னாயுடு, கொல்லு ரவீந்திரா, பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA