Enter your Email Address to subscribe to our newsletters

ஏலூர் , 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஏலூர் மாவட்டம் முசுனூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் புதிய ‘நான்-ஜி.எம்.ஓ.’ பாப்கார்ன் மக்காச்சோள கலப்பின விதை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த விதையை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் ஆந்திர பிரதேச கவர்னர் எஸ். அப்துல் நசீர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் முசுனூர் பகுதிக்கு வந்தபோது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் கவர்னர் அப்துல் நசீர் அவரை வரவேற்று நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
‘கோர்மே பாப்கார்னிகா’ நிறுவனம் சார்பில் இந்த புதிய ரக பாப்கார்ன் விதை உருவாக்கப்பட்டுள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்படாத இந்த விதை மூலம் தரமான பாப்கார்ன் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
முசுனூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாப்கார்ன் பதப்படுத்தும் தொழிற்சாலை, ஆசியாவிலேயே மிகப்பெரிய பாப்கார்ன் பதப்படுத்தும் மையங்களில் ஒன்றாக விளங்குவதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனம் ஏற்கனவே நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து, பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாப்கார்ன் சாகுபடியை ஊக்குவித்து வருகிறது.
மேலும், பல்வேறு மல்டிபிளெக்ஸ் மற்றும் சினிமா தியேட்டர்களுக்கு பாப்கார்ன் வழங்கி வருகிறது.
நிகழ்ச்சியில் பேசிய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு,
நவீன வேளாண் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார்.
‘நான்-ஜி.எம்.ஓ.’ வகை வேளாண் பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால், இதன் மூலம் ஆந்திர விவசாயிகளுக்கு புதிய சந்தை வாய்ப்புகளும் கூடுதல் வருமானமும் கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பாப்கார்ன் சாகுபடியை மேலும் விரிவுபடுத்துவதற்காக விவசாயிகளுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இந்த புதிய முயற்சி ஆந்திர விவசாயிகளுக்கு புதிய வருமான வாய்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA