Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திறனில் குஜராத் மற்றும் ராஜஸ்தானை விட தமிழ்நாடு பின்தங்கியுள்ளது என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில்,
இந்தியாவிலேயே சூரிய மற்றும் காற்றாலை மின்னுற்பத்தியில் முதல் மாநிலமாக இருந்த தமிழ்நாடு, 2026 ஆம் ஆண்டின் நடுவில் குஜராத் சுமார் 52,610 மெகாவாட் மற்றும் ராஜஸ்தான் சுமார் 50,335 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை எட்டியிருக்கும்போது, தமிழ்நாடு சுமார் 29,800 மெகாவாட் அளவிலேயே உள்ளது வருந்தத்தக்கது.
இதற்கு மிக முக்கிய காரணம், குஜராத் (குறிப்பாக கட்ச் பகுதி) மற்றும் ராஜஸ்தானில் பெரிய அளவிலான மலிவான பாலைவன நிலங்கள் உள்ளன.
அம்மாநில அரசுகள் அப்படிப்பட்ட நிலங்களை மலிவான விலையில் அல்லது குத்தகையில் முதலீட்டாளர்களுக்கு அளிக்கிறது. இதனால் பெரிய அளவிலான சூரிய மின் பூங்காக்கள் எளிதில் அமைக்க முடிகிறது.
தமிழ்நாட்டில் அத்தகைய பெரிய நிலப்பரப்புகள் ஏற்கனவே நல்ல காற்றாலை திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டுவிட்டன என்ற நிலையில், மீதமுள்ள நிலங்களின் விலை அதிகமாக உள்ளதாலும், வேறு சில லாபகரமான தொழில்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் தெளிவான முதலீட்டாளர் நட்பு கொள்கைகளை கொண்டுள்ளன.
தமிழ்நாட்டில் சூரிய மற்றும் காற்றாலை ஆற்றலுக்கான தனித்தனியான, புதுப்பிக்கப்பட்ட கொள்கைகள் சில காலங்களில் இல்லாமல் இருந்தன என்பதாலும், அதிக திறந்த அணுகல் கட்டணங்கள் (Transmission & Wheeling Charges, cross Subsidy Charges , Standby Charges) மற்றும் ஒப்புதல் தாமதங்களும் முதலீட்டாளர்களை கடுமையாக பாதித்தன.
தமிழக அரசின்/ திமுக அரசின் திட்டமிடுதல் இல்லாமை மற்றும் அலட்சியமான நிர்வாகமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
தமிழகத்தின் மின் கட்டமைப்பு நாட்டிலேயே மிகச் சிறந்ததாக இருந்தாலும் கூட, அதன் தொடர்ச்சியாக மின் பரிமாற்ற மற்றும் வெளியேற்ற அமைப்புக்கான
புதிய திட்டங்களுக்கு தேவையான மின் விநியோக இணைப்பு வசதிகள் போதுமான அளவில் இல்லாததால் பல திட்டங்கள் தாமதமாகின அல்லது நிராகரிக்கப்பட்டன.
தமிழ்நாட்டை நோக்கி மின் உற்பத்திக்காக படையெடுத்துக் கொண்டிருந்த முதலீட்டாளர்கள், குஜராத் மற்றும் ராஜஸ்தான் அரசுகளின் வேகத்தை, வெளிப்படையான நிர்வாகத்தை கண்டு அங்கே செல்ல தொடங்கினர். இதன் காரணமாக குஜராத் மற்றும் ராஜஸ்தான் சூரிய ஆற்றலில் வேகமாக வளர்ந்தன.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக திட்ட ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறைகளில் லஞ்சம், ஊழல் மற்றும் கட்சி நிதி தொடர்பான குற்றச்சாட்டுகளும் தமிழகத்தை பின்னுக்கு தள்ளியதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சூரிய மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு அனுமதி பெற ஒரு மெகாவாட்டிற்கு ரூ. 25 லட்சம் வீதம் ஆளும் கட்சிக்கு 'கட்சி நிதி' யாக (Party Fund) வசூலிக்கப்பட்டதால் பெரு நிறுவனங்கள் தங்களின் முதலீட்டை வேறு மாநிலங்களில் செய்தது மிகப்பெரும் காரணம்.
இந்நிலை தமிழகத்தில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வந்தது. மேலும் நிலம் தொடர்பான வசதிகள் (LFS) மற்றும் பிற அனுமதிகளுக்காக பெரும் தொகை கோரப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இத்தகைய நடைமுறைகள் முதலீட்டாளர்களை தமிழ்நாட்டை விட்டு விலகச் செய்து, திட்டங்களை தாமதப்படுத்தியுள்ளன.
இந்த காரணிகளின் விளைவாகவே தமிழ்நாடு, குஜராத் மற்றும் ராஜஸ்தானை விட பின்தங்கியுள்ளது.
நில வசதி மேம்பாடு, தெளிவான கொள்கைகள், கிரிட் உள்கட்டமைப்பு வலுப்படுத்தல் மற்றும் ஒப்புதல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை ஆகியவை மேம்பட்டால், தமிழ்நாடு இந்த இடைவெளியை குறைக்க முடியும்.
மேலும், கடந்த திமுக ஆட்சியில் விண்ணப்பம் செய்து விட்டு காத்திருக்கும் பல முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்களின் விண்ணப்பங்களை தற்போதைய அரசு நிறுத்தி வைத்துள்ளதும் மிகப்பெரிய தடைக்கல்லாக உள்ளது.
ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் பெரும் தொகையை 'கட்சி நிதி'யாக அளித்து விட்டு தற்போது முழித்துக் கொண்டிருக்கிறார்கள். தொழில் துவங்க முடியாமல், அதே நேரத்தில் தாங்கள் தொடர்புடைய திட்டத்திற்காக வங்கியில் பெற்ற கடனுக்கான மாதாந்திர தவணையை செலுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற த வெ க அரசின் நோக்கம் சரியாக இருந்தாலும், தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் அரசு சொல்வதை தானே செய்வார்கள்.
அதனடிப்படையில், அம் முதலீட்டாளர்களின் விண்ணப்பங்களை சற்றும் தாமதிக்காமல் ஏற்றுக்கொண்டு உற்பத்தியை அனுமதிப்பது மட்டுமே தொலைநோக்கு பார்வை உள்ள ஒரு அரசின் செயல்பாடாக இருக்க முடியும்.
கட்சி நிதி கோரியவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கையை எடுக்காமல், வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் செலுத்தியவர்களை தண்டிப்பது, முதலீட்டாளர்களை வெறுப்படையச் செய்வதோடு, முதலீடுகளை வேறு மாநிலங்களில் செய்வதற்கு வழிவகுக்கும் என்பதை மாநில அரசு உணர வேண்டும்.
தமிழகத்தின் மின் கட்டமைப்பு இந்தியாவிலேயே மிகச் சிறந்தது. ஆனால், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களை போல் நாம் விறுவிறுப்பாக, வெளிப்படையாக செயல்படவில்லையெனில், தமிழகத்தின் உற்பத்தி குறைவதோடு எதிர்காலத்தில் குறைந்தது 25 ஆண்டுகளில்) தமிழக மக்கள், தங்களின் மின்சார தேவைக்கு குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களையே சார்ந்திருக்கும் சூழ்நிலை ஏற்படும் என்பது காலத்தின் கட்டாயமாகி விடும்.
அதன் பின்னர் ஐயோ, நம் மாநிலத்திற்கு வரவேண்டிய தொழில் வாய்ப்பு குஜராத்திற்கு சென்று விட்டதே என்று புலம்புவதில் எந்த பயனும் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN