நீர்வரத்து அதிகரிப்பால் குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க தடை - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
தென்காசி, 24 ஆகஸ்ட் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அபாய அளவை எட்டியுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் ஐந்தருவியை ஒட்டிய வனப்பகுதியில் பெய்து வரும் மழையால் ஐ
Ban on bathing at Courtallam's Five Falls


தென்காசி, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அபாய அளவை எட்டியுள்ளது.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் ஐந்தருவியை ஒட்டிய வனப்பகுதியில் பெய்து வரும் மழையால் ஐந்தருவிக்கு வரும் நீர்வரத்து இன்று காலை முதல் திடீரென அதிகரித்து காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அருவிகளில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் உடனடியாக வெளியேற்றி, அருவிக்கு செல்லும் பாதைகளில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே தென்காசி, குற்றாலம் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் கனமழை தீவிரமடைந்துள்ளது.

இதனால் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

குறிப்பாக ஐந்து கிளைகளாக பிரிந்து விழும் ஐந்தருவியில் நீரின் வேகம் அதிகமாக இருப்பதால், பாறைகளில் வழுக்கி விழும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீசன் நேரம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்துள்ளனர்.

ஆனால் திடீரென விதிக்கப்பட்ட தடை உத்தரவால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நீர்வரத்து சீரான பின்னரே மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b