Enter your Email Address to subscribe to our newsletters

பீகார், 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தனாபூர் பகுதியில் பல இடங்களில் கடுமையான கரையோர அரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் அம்மாநில அமைச்சர் ராம் கிருபால் யாதவ் இன்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாமலும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதில் சிரமம் ஏற்படாமலும் இருப்பதை உறுதி செய்யுமாறு நிர்வாகத்திற்கு அவர் உத்தரவிட்டார்.
ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,
வெள்ளநீர் பீகார் உட்பட பல பகுதிகளில் புகுந்துள்ளது. இன்று அதிகாரிகள் மற்றும் கட்சி தொண்டர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டேன். பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டு வருவதால் உயிர் மற்றும் சொத்து இழப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
சாலை தொடர்பு துண்டிக்கப்பட்ட இடங்களில் படகுகளை ஏற்பாடு செய்யவும், விதிமுறைகளின்படி தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
சில இடங்களில் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் தேவைக்கேற்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதியில் அரசு படகு சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது. நீர்மட்டம் உயரும் காலங்களில் இது முக்கியமான இணைப்பு மற்றும் உதவியாக இருந்து வருகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
கங்கை நீர்மட்டம் சமீபத்தில் உயர்ந்ததால் இப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டுள்ளதை தனாபூர் துணை கோட்டாட்சியர் அனிருத் பாண்டே உறுதிப்படுத்தினார். படகு சேவைகள் உட்பட அடிப்படை வசதிகளை நிர்வாகம் தொடர்ந்து பராமரித்து வருவதாகவும், அரிப்பு பிரச்சினையை கையாள நீர்வளத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆற்றின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், தொடர்பை பராமரிக்கவும் அத்தியாவசிய சேவைகளை வழங்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆற்றங்கரையோர குடியிருப்புகளுக்கு அரிப்பு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், பாதிக்கப்படக்கூடிய இடங்களை மதிப்பீடு செய்து வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு மேலும் சேதம் ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
நீர்மட்ட உயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படகுகள், உணவுப் பொருட்கள் மற்றும் தங்குமிடங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் முயற்சியில் நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதால் நிலைமை தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / vidya.b