Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் தலைமையில் இன்று தொடங்கியது.
முதல் நாள் கூட்டம் என்பதால் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையாற்றி பேரவையை துவக்கி வைக்க காரில் சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்தார். அவரை தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் பூங்கொத்து அளித்து வரவேற்றனர்.
மேலும், துணை நிலை ஆளுநருக்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சட்டப்பேரவை கூட்ட அரங்குக்கு துணை நிலை ஆளுநர் வந்தார். அங்கு பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்தார். இதைத்தொடர்ந்து பேரவை நிகழ்வுகள் தொடங்கின. தமிழ்த்தாய் வாழ்த்து, வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்பட்டன. தொடர்ந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது,
புதுவையின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. 2020- 21ல் - 2.21 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டிபி வளர்ச்சி, 2025- 26ல் 8.12 சதவீதமாக உயர்ந்துள்ளது. தனிநபர் வருமானம் ரூ.3 லட்சத்து 23 ஆயிரத்து 745-லிருந்து ரூ.3 லட்சத்து 44 ஆயிரத்து 926 ஆக உயர்ந்து 6.5 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது.
மாநிலத்தின் மொத்த வருவாய் ரூ.12 ஆயிரத்து 346.80 கோடியிலிருந்து ரூ.13 ஆயிரத்து 397.69 கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.6 ஆயிரத்து 848.29 கோடியிலிருந்து ரூ.7 ஆயிரத்து 631.53 கோடியாக உயர்ந்து 11.44 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தகுதி மற்றும் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் சுமார் 4 ஆயிரத்து 160 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
சுமார் 1000 புதிய பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படும். அரசுப் பணியாளர் தேர்வுகளை விரைவாகவும் வெளிப்படையாகவும் நடத்த புதுவை தேர்வாணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த உயர்நிலை, மேல்நிலை மற்றும் பட்டதாரி நிலைத் தேர்வுகள் மூலம் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்திரா காந்தி சதுக்கம்- ராஜீவ் காந்தி சதுக்கம் இடையே தேசிய நெடுஞ்சாலை 32-ல் ரூ.436.18 கோடியில் உயர்மட்ட சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நடேசன் நகர்- முள்ளோடை உயர்மட்டச் சாலை, நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய மொத்த மதிப்பீடு ரூபாய் ஆயிரத்து 500 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. காரைக்காலில் நண்டலாறு- வாஞ்சூர் தேசிய நெடுஞ்சாலை 45 ஏ ரூ.57 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் 20 புதிய பேருந்துகள், அதில் குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பேருந்துகளும் வாங்கப்பட உள்ளன.
புதுவை விமான நிலைய விரிவாக்கம் மிக முக்கியமான எதிர்காலத் திட்டங்களில் ஒன்று. தற்போதைய ஓடுபாதை ஆயிரத்து 500 மீட்டரிலிருந்து 2 ஆயிரத்து 300 மீட்டராக மாற்றப்பட உள்ளது. இதன் மூலம் பெரிய விமானங்களை இயக்க முடியும். புதிய பயணிகள் முனையம், நவீன பாதுகாப்பு வசதிகள், விமான நிறுத்துமிடங்கள் உருவாக்கப்படும். இதன் மொத்த திட்ட மதிப்பு ரூ.4 ஆயிரத்து 800 கோடியாகும். இத்திட்டத்தின் மூலம் புதுவை முக்கியமான பிராந்திய விமானப் போக்குவரத்து மையமாக உருவாகும்.
உழவர்கரை, தட்டாஞ்சாவடியில் ரூ.725 கோடியில் தகவல் தொழில்நுட்ப பொருளாதார மண்டலம் அமைக்கப்பட உள்ளது. இது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பால் உருவாக்கப்படும் இந்தியாவின் முதல் சிறப்பு பொருளாதார மண்டலமாகும். அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 30 ஆயிரம் பேர் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் பெறுவர்.
கரசூர் பன்முக சிறப்பு பொருளாதார மண்டலம் 213.12 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. இதன் முதலீடு ரூ.2 ஆயிரத்து 500 கோடியாகும். அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 40 ஆயிரம் வேலைவாய்ப்புகள் இதன்மூலம் கிடைக்கும். தனியார் முதலீட்டுடன் காரைக்கால், மாகி, ஏனாமில் 24 மணி நேர குடிநீர், பாதாளச் சாக்கடை, வடிகால், சாலைகள், பாலங்கள் மற்றும் கடற்கரை நடைபாதைகள் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று பிற்பகல் 3:00 மணி அளவில், நிதித்துறையைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் என். ரங்கசாமி ₹14,300 கோடி மதிப்பிலான முழுமையான நிதிநிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்கிறார்.
இந்த வரைவு பட்ஜெட் திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b