குப்பையை தரம் பிரிக்கத் தவறினால் செப்டம்பர் முதல் கடும் அபராதம் - சென்னை மாநகராட்சி அதிரடி
சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை மாநகரில் தூய்மையை உறுதி செய்வதற்காக சென்னை பெருநகர மாநகராட்சி முக்கிய அதிரடி நடவடிக்கையை அறிவித்துள்ளது. இனி வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து பெறப்படும் குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் செப்டம
Chennai Corporation's bold move: Heavy fines for failure to segregate waste starting September.


சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை மாநகரில் தூய்மையை உறுதி செய்வதற்காக சென்னை பெருநகர மாநகராட்சி முக்கிய அதிரடி நடவடிக்கையை அறிவித்துள்ளது.

இனி வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து பெறப்படும் குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் செப்டம்பர் மாதம் முதல் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி,

பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை வீசுவோர் மீது மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-ன் கீழ் அபராதம் விதிக்கப்படும்.

குறிப்பாக தரம் பிரிக்கப்படாத குப்பையை கொட்டும் தனிநபர் வீடுகளுக்கு ரூ.100, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.1000, பெருமளவு குப்பை உருவாக்குபவர்களுக்கு ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது இடங்கள், கழிவுநீர் பாதைகள், நீர்நிலைகளில் குப்பை கொட்டுதல், குப்பைகளை தரம் பிரிக்காமல் கொட்டுதல், வாகனங்களில் வந்து குப்பை கொட்டுதல் போன்ற குற்றங்களுக்கு அபராதத் தொகை 10 மடங்கு வரை உயர்த்தப்பட்டு ரூ.5,000 வரை அபராதம் விதிக்க மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனை அமல்படுத்த சுமார் 500 POS கருவிகள் வாங்கப்பட்டு மாநகராட்சி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து காவலர்கள் விதிமுறை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது போல், தூய்மை பணியாளர்களே சம்பவ இடத்திலேயே ஸ்பாட் பைன் விதிக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

எனவே, பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை, மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்றும், விதிகளை மீறுவோர் மீது செப்டம்பர் முதல் கடும் நடவடிக்கை பாயும் என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b