செப்டம்பர் 1 முதல் திரைப்படப் பணிகள் நிறுத்தம் முடிவை மறுபரிசீலனை செய்ய தயாரிப்பாளர் சங்கங்களுக்கு ஃபெப்சி வேண்டுகோள்
சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச) தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளை ஃபெப்சி (FEFSI) புரிந்துகொள்வதாகவும், தயாரிப்பாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்
Fefsi


Nn


சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச)

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளை ஃபெப்சி (FEFSI) புரிந்துகொள்வதாகவும், தயாரிப்பாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஆனால், திரையரங்க உரிமையாளர்களுடனான பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கங்கள் அறிவித்திருப்பதுடன், படப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து திரைப்படப் பணிகளையும் அதே நாளில் இருந்து நிறுத்தப் போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக ஃபெப்சி தெரிவித்துள்ளது.

படப்பிடிப்புகள் மற்றும் திரைப்படப் பணிகள் நிறுத்தப்படுவதால், அதன் பாதிப்பு தயாரிப்பாளர்களுக்கு மட்டுமின்றி, தினசரி வேலைவாய்ப்பை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஏற்படும் என ஃபெப்சி சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு சுமார் 45 முதல் 50 நாட்கள் வரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட திரைப்படப் பணிகள் நிறுத்தப்பட்டதாகவும், அப்போது தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர் அமைப்புகளுக்கு இடையே அரசின் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் ஃபெப்சி தெரிவித்துள்ளது. அந்தப் பேச்சுவார்த்தையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும், அவற்றில் பல இன்றளவும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் பிரச்சினை ஏற்படும்போது முதலில் படப்பிடிப்புகளை நிறுத்துவது, பின்னர் பேச்சுவார்த்தை நடத்துவது, முடிவுகள் எடுப்பது, ஆனால் அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் விடுவது போன்ற நிலை தொடர்ந்தால், அது ஒட்டுமொத்த திரைப்படத் துறைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஃபெப்சி தெரிவித்துள்ளது.

திரைப்படத் துறையில் ஒளிப்பதிவாளர்கள், உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், மேக்கப் கலைஞர்கள், ஆடைத் தொழிலாளர்கள், லைட்மேன்கள், செட் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டால் இவர்களின் தினசரி வருமானம் நேரடியாகப் பாதிக்கப்படும் என்றும் ஃபெப்சி கூறியுள்ளது.

இதனால், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து திரைப்படப் பணிகளையும் நிறுத்தும் முடிவை தயாரிப்பாளர் சங்கங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஃபெப்சி அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து அரசின் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

திரைப்படத் துறையில் நிலவும் அனைத்து பிரச்சினைகளையும் ஒரே கட்டமாக பேசி தீர்வு காண்பதன் மூலம், துறை மேலும் வேகமாக செயல்பட வழிவகுக்கும் என்றும் ஃபெப்சி தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகள் தெளிவான காலக்கெடுவுடன் நடைமுறைப்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகள் முழுமையாக செயல்படுத்தப்படாத நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க தெளிவான செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஃபெப்சி வலியுறுத்தியுள்ளது.

திரைப்படத் துறை மற்றும் திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து நன்கு அறிந்த தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு சுமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஃபெப்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

“வேலைநிறுத்தம் என்பது எந்தப் பிரச்சினைக்கும் உடனடியான தீர்வாக இருக்க முடியாது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும், எடுக்கப்படும் முடிவுகளை முறையாக நடைமுறைப்படுத்துவதுமே திரைப்படத் துறையின் நீண்டகால நலனுக்கு ஏற்றது” என ஃபெப்சி தெரிவித்துள்ளது.

தயாரிப்பாளர்களின் நியாயமான கோரிக்கைகள் பாதுகாக்கப்படுவதுடன், திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாத வகையில், தமிழ்நாடு அரசு, தயாரிப்பாளர் சங்கங்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இணைந்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் ஃபெப்சி கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ