Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழக த.வெ.க. அரசு தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு படிப்படியாக நிறைவேற்றி வருவது பாராட்டுக்குரியது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக சட்டப்பேரவையில் தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடரில், ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்திற்கு ‘வெற்றிப் பயணம்’ என பெயரிடப்பட்டு, காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் முதற்கட்டமாக விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சாதாரண அரசு பேருந்துகளில் மட்டுமின்றி, மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் விரைவு, எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், மாவட்டங்களுக்கு இடையே பெண்கள் பயணம் மேற்கொள்வதற்கு ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மக்களின் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் வகையில் தமிழக அரசு மேலும் பல்வேறு திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கும் தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) என்றும் துணை நிற்கும் என்றும், தமிழக அரசின் மக்கள் நலப் பணிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ