அரிசி, பருப்பு விலை அதிகரிப்பை தொடர்ந்து சர்க்கரை விலையும் கடும் உயர்வு - டீ, காபி விலை மீண்டும் உயரும் அபாயம்!
தமிழ்நாடு, 24 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னையில் அரிசி, பருப்பு விலை அதிகரிப்பை தொடர்ந்து சர்க்கரை விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சர்க்கரை ரூ.70 வரை விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்க்கரை விலை உயர்வால் ட
க


தமிழ்நாடு, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னையில் அரிசி, பருப்பு விலை அதிகரிப்பை தொடர்ந்து சர்க்கரை விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ சர்க்கரை ரூ.70 வரை விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்க்கரை விலை உயர்வால் டீ, காபி விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் காரணமாக கடந்த மே மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்தது.

எனவே, பொதுமக்கள் மற்றும் உணவகங்கள் நடத்தும் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களில் உணவு பொருட்கள் விலை கடந்த மே மாதம் உயர்த்தப்பட்டது.

சிறிய உணவகம் முதல் பெரிய உணவகம் வரை விலை உயர்வு என்பது இருந்தது. அதே நேரத்தில் டீக்கடைகளில் டீ விலை என்பது 12 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

மேலும் காப்பி விலை ரூ.15லிருந்து ரூ.20 ஆக அதிகரிக்கப்பட்டது. இது சிறிய கடைகளில் தான்.

பெரிய ஓட்டல்களில் தரத்திற்கு ஏற்றார் போல் விலை உயர்வு என்பது இருந்தது. இதனால், டீ, காபி பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

அதே நேரத்தில் கடந்த மாதம் அரிசி விலையும் கிடுகிடுவென உயர்வை சந்தித்தது. அதாவது தமிழ்நாட்டில் ஓராண்டு அரிசி தேவை 91 லட்சம் டன்னான உள்ளது. இதில், 75 லட்சம் டன் வரை தமிழக விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மீதி தேவைக்கு ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வருகிறது.

தமிழகத்தில் பெரும்பாலானோர் கர்நாடக பொன்னி அரிசி வகைகளை தான் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இதற்காக கர்நாடகாவில் இருந்து பொன்னி அரிசி அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

கர்நாடகாவில் நடப்பாண்டு விளைச்சல் என்பது வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் அரிசி இறக்குமதி என்பது அடியோடு பாதிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் டீசல் விலை உயர்வு மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் லாரி வாடகை உயர்வு, உரங்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் அரிசி விலை என்பது எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் உயர்ந்தது.

அதாவது ரூ.55க்கு விற்கப்பட்ட கர்நாடக பொன்னி அரிசி ரூ.80க்கு விற்பனையானது. இட்லி அரிசி ரூ.35லிருந்து ரூ.50 ஆக விலை அதிகரித்துள்ளது. இதேபோல ஆர்.என்.ஆர். அரிசி ரூ. 63.50லிருந்து ரூ.71.15 ஆகவும், கோ-51 ரூ.35லிருந்து ரூ.45 ஆகவும், குருணை ரூ.25லிருந்து ரூ.30 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

இந்த அரிசி விலை உயர்வு இன்னும் தொடர்ந்து வருகிறது. அதே போல மளிகை பொருட்களான பருப்பு உள்ளிட்ட பொருட்களும் கடந்த மாதம் அதிகரித்தது.

உளுத்தம் பருப்பு கிலோ ரூ.120லிருந்து ரூ.150 ஆகவும், கடலைப் பருப்பு ரூ.80லிருந்து ரூ.100 ஆகவும், தனியா ரூ.160லிருந்து ரூ.250 ஆகவும் விற்பனையானது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தற்போது சர்க்கரை விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் டீக்கடை, இனிப்பகங்கள் நடத்தி வரும் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதாவது கடந்த மாதம் சர்க்கரை ஒரு கிலோ 40 ரூபாய் முதல் அதிகபட்சமாக 45 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. இந்நிலையில் கடந்த 20 நாட்களில் பல மடங்கு சர்க்கரை விலை உயர்ந்துள்ளது.

இதனால் தற்போது ஒரு கிலோ சர்க்கரை ரூ.65 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, வெல்லம் கிலோ 55 ரூபாயில் இருந்து 80 ரூபாயாகவும், நாட்டு சர்க்கரை கிலோ 55 ரூபாயில் இருந்து 70 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 50 கிலோ கொண்ட சர்க்கரை மூட்டை ரூ.2,150க்கு விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை ரூ.3,500 ஆக உயர்ந்துள்ளது.

சர்க்கரை விலை உயர்வால் அந்த பட்டியலில் சர்க்கரை என்ன என்று குறிப்பிடுவதை கடைக்காரர்கள் தவிர்த்துள்ளனர். தினசரி சர்க்கரை விலை உயர்ந்து வருகிறது.

அதே நேரத்தில் டீக்கடை, இனிப்பக உரிமையாளர்கள் ஏற்கனவே சிலிண்டர் விலை உயர்வால் பாதிக்கப்பட்டு வரும் தாங்கள், தற்போது ஏற்பட்டுள்ள சர்க்கரை விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / Durai.J