Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில், அரிய இருவாழ்வியான பூபதியின் ஊதா தவளை எனப்படும் கேழல் மூக்கன் இனத்தொகை கண்காணிப்பு தொடர்பான இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
மத்திய உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (CCMB), ஹைதராபாத் சார்பில் நடைபெற்ற இப்பயிற்சியில், இருவாழ்விகளின் பாதுகாப்பு, இனத்தொகை கண்காணிப்பு மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பது குறித்து நிபுணர்கள் விளக்கமளித்தனர்.
பயிற்சியில் பேசிய CCMB தலைமை விஞ்ஞானி பேராசிரியர் கார்த்திகேயன் வாசுதேவன், மேற்குத் தொடர்ச்சி மலையின் மழைப்பொழிவு, உயரம் மற்றும் புவியியல் அமைப்பு காரணமாக உலகின் வேறு பகுதிகளில் காணப்படாத பல அரிய மற்றும் உள்ளூர் உயிரினங்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
களக்காடு, காகாச்சி, கோதையாறு உள்ளிட்ட பகுதிகள் அரிய இருவாழ்விகளின் முக்கிய வாழ்விடங்களாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தவளைகள் விவசாயத்திற்கு முக்கியமான நண்பர்கள் என்றும், பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை இயற்கையான முறையில் கட்டுப்படுத்துவதில் அவை முக்கியப் பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் தவளை கால்கள் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், தவளைகளின் சூழலியல் முக்கியத்துவம் உணரப்பட்ட பின்னர் அவற்றின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தற்போது இருவாழ்விகளுக்கு வனவிலங்கு சட்டவிரோத வர்த்தகம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாகவும், ஒரு பகுதியில் காணப்படும் உயிரினங்களை சட்டவிரோதமாக வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் நோய்க்கிருமிகள் புதிய பகுதிகளுக்கு பரவும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்தார்.
மேலும், தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் உள்ளிட்ட மனித செயல்பாடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் இயற்கையான வாழ்விடங்கள் மாற்றமடைவதால், இருவாழ்விகளின் இனப்பெருக்கம் மற்றும் வாழ்விடத் தொடர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூஞ்சைக்கொல்லிகள் நீர்நிலைகளில் கலப்பதால் தவளைகளின் உடலியல் மற்றும் இனப்பெருக்க அமைப்பில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் கார்த்திகேயன் வாசுதேவன் எச்சரித்தார். எனவே, நீர்நிலைகளின் தரத்தை பாதுகாப்பது இருவாழ்விகளின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
வனப்பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படுவதால் தவளைகள் உள்ளிட்ட சிறிய உயிரினங்களின் வாழ்விடங்கள் துண்டிக்கப்படுவதுடன், சாலைகளை கடக்கும்போது வாகனங்களில் சிக்கி அவை உயிரிழக்கும் அபாயமும் இருப்பதாக தெரிவித்தார். இதனால் ஒரே இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து, இனத்தொகை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் விளக்கினார்.
பூபதியின் ஊதா தவளை உள்ளிட்ட அரிய இருவாழ்விகளின் இனத்தொகையை தொடர்ந்து அறிவியல் முறையில் கண்காணித்து, அவற்றின் இயற்கையான வாழ்விடங்களை பாதுகாப்பதன் மூலமே மேற்குத் தொடர்ச்சி மலையின் தனித்துவமான உயிர்ப்பன்மையை பாதுகாக்க முடியும் என பயிற்சி வகுப்பில் வலியுறுத்தப்பட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ