Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
பெங்களூரு கோரமங்களா பகுதியில் ஓடும் காரில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் இருந்த டிரைவர் உள்பட 3 பேரும் உடனடியாக கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோரமங்களா வாட்டர் டேங்க் சந்திப்பு வழியாக நேற்று அதிகாலை ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் டிரைவர் உள்பட 3 பேர் பயணம் செய்தனர்.
வாட்டர் டேங்க் சந்திப்பு அருகே வந்தபோது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.
இதனை கவனித்த டிரைவர், உடனடியாக காரை சாலையோரமாக நிறுத்தினார். பின்னர் காரில் இருந்த 3 பேரும் அவசரமாக கீழே இறங்கினர்.
அவர்கள் இறங்கிய சில நிமிடங்களில் காரின் முன்பகுதியில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென கார் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தபோதிலும், கார் முழுவதும் எரிந்து உருக்குலைந்தது.
இந்த தீ விபத்து காரணமாக அகர்-சர்ஜாபுரா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. காரில் திடீரென தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA