Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், தமிழக அரசியலில் தற்போது எழுந்துள்ள கட்சித் தாவல் பேச்சுக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது,
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணையும் செயலை வன்மையாக கண்டிப்பதாக கூறினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்வது என்பது அந்த தொகுதி மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய அநீதி என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
மக்கள் ஒரு கட்சியின் சின்னத்தையும், அதன் கொள்கைகளையும் நம்பி வாக்களிக்கிறார்கள். அந்த நம்பிக்கையை உடைக்கும் வகையில் பதவியை துறப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. மேலும், இது போன்று பதவியை ராஜினாமா செய்பவர்களுக்கு மீண்டும் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கக்கூடாது என்றும், அதற்கான சட்டத் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசுடன் மாநில அரசு பரஸ்பரம் நல்லுறவுடன் இருப்பது தான் நல்லது என்றும், அது தமிழகத்தின் வளர்ச்சிக்கு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
அதே சமயம் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள தொகுதி மறுவரையறை திட்டம் குறித்து பேசுகையில், அந்த திட்டம் கொண்டு வரப்பட்டால் அது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாக அமையும் என்று எச்சரித்தார்.
தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் எந்தவொரு முயற்சியையும் ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக தமிழக வெற்றிக் கழகம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், ஆட்சிக்கு வரலாம். ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் அந்த அரசு ஐந்து ஆண்டுகள் நீடிக்கும், யாரும் பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்கத் தேவையில்லை என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.
Hindusthan Samachar / vidya.b