பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - கஸ்தூரி
சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.) கும்பகோணத்தில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் கருத்துகளை தெரிவித்தார். சட்டப்பேரவையில் நடைபெறு
Kast


சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

கும்பகோணத்தில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் கருத்துகளை தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்கள், தொலைக்காட்சி சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோ போன்று காரசாரமாக இருப்பதாக கஸ்தூரி விமர்சித்தார்.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும், தமிழகத்திற்கு தேவையான மிகப்பெரிய திட்டம் அண்டை மாநிலத்திற்கு சென்றுவிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். திமுகவினர் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக தமிழகத்திற்கு தேவையான திட்டத்தை மாற்றுவது சரியல்ல என்றும், எனவே பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கஸ்தூரி வலியுறுத்தினார்.

சமூக வலைதளத்தில் பெண் ஒருவரின் உடை தொடர்பாக வெளியான சர்ச்சைக்கு அமைச்சர் கீர்த்தனா சரியான பதிலடி கொடுத்துள்ளதாகவும், அவருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கஸ்தூரி கூறினார்.

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு யார் பேச்சையும் கேட்பதாக தெரியவில்லை எனக் கூறிய கஸ்தூரி, தமிழகத்தில் தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் மூலம் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் பேசி அவரது நிலைப்பாட்டை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள கும்பகோணம் மகாமகத் திருவிழாவிற்கான பணிகளை தமிழக அரசு இன்னும் தொடங்கவில்லை என்றும் கஸ்தூரி குற்றம்சாட்டினார். மகாமக விழாவிற்காக மத்திய அரசு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கி வைத்துள்ளதாகவும், ஆனால் தமிழக அரசு இதுவரை அந்த நிதியில் இருந்து ஒரு பைசா கூட பெற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

மகாமகத் திருவிழாவுக்கான திட்டமிடலை முறையாக தயாரித்து வழங்கினால், தேவையான அளவு நிதியை வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி மகாமகத் திருவிழாவில் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாகவும் கஸ்தூரி கூறினார்.

மகாமகத் திருவிழா மார்ச் 9-ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னேற்பாடு தொடர்பாக ஆணையர் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பிப்ரவரி மாதம் மகாமகம் நடைபெறும் என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மகாமகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளில் தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டு வருவதாகவும் கஸ்தூரி குற்றம்சாட்டினார்.

மேலும், கோடீஸ்வரர்களாக இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் திட்டம், தனியார் நகைக்கடையுடன் இணைந்து தங்க மோதிரம் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டு, மக்கள் கேட்பது போன்று பின்னர் அறிவிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தவெகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஏற்கனவே விரிசல் ஏற்படத் தொடங்கிவிட்டதாகவும் கஸ்தூரி கூறினார். தமிழக முதலமைச்சர் விஜய்தான் நாளைய பிரதமர் என தவெக தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், அதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், பேறுகால விடுப்பு திட்டத்திற்கும் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறிய கஸ்தூரி, இடைத்தேர்தலில் தவெக பெரும்பான்மை பெற்றுவிட்டால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களின் பதவிகளுக்கு சிக்கல் ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ