Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச)
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடுவது தொடர்பாக காவிரி நீர் ஒழுங்காற்று குழு முக்கிய பரிந்துரையை வழங்கியுள்ளது.
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 141-ஆவது கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அதிகாரிகள் பங்கேற்று, அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, குடிநீர் மற்றும் பாசனத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.
கூட்டத்தின் முடிவில், கர்நாடக மாநிலம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 9,000 கனஅடி நீர் வீதம் நாளை முதல் அடுத்த 15 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையின்படி கர்நாடகா 15 நாட்களுக்கு தொடர்ந்து விநாடிக்கு 9,000 கனஅடி நீரை திறந்துவிட்டால், அந்தக் காலகட்டத்தில் தமிழகத்திற்கு மொத்தமாக சுமார் 11.66 டிஎம்சி காவிரி நீர் கிடைக்கும்.
தற்போதைய நிலையில் காவிரி நீரை எதிர்பார்த்து தமிழக டெல்டா பகுதிகளில் விவசாயப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒழுங்காற்று குழுவின் இந்தப் பரிந்துரை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எனினும், இது தற்போது பரிந்துரை மட்டுமே என்பதால், இறுதி முடிவு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்குப் பிறகே உறுதியாகும்.
ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நாளை ஆலோசனை நடத்த உள்ளது.
இந்த ஆலோசனைக்குப் பிறகு, தமிழகத்திற்கு விநாடிக்கு 9,000 கனஅடி நீரை 15 நாட்களுக்கு திறப்பது தொடர்பாக கர்நாடகாவுக்கு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி நீர் திறப்பு தொடர்பான ஆணையத்தின் முடிவு தமிழக விவசாயிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ