சென்னையில் கடற்கரைகள், ஏரிகளை மேம்படுத்த ரூ.1000 கோடியில் பிரமாண்ட திட்டம்
சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.) பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைகள் மற்றும் ஏரிகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி மூன்று முக்கிய கடற்கரைகள் மற்றும் நான்கு ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு,
Massive ₹1,000 crore project to upgrade beaches and lakes in Chennai.


சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைகள் மற்றும் ஏரிகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதன்படி மூன்று முக்கிய கடற்கரைகள் மற்றும் நான்கு ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை சர்வதேச தரத்தில் மேம்படுத்துவதற்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் கடற்கரைகளில் பார்வையாளர்களுக்கான நவீன நடைபாதைகள், மின் விளக்கு வசதிகள், சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சிறுவர்களுக்கான விளையாட்டு பகுதிகள் மற்றும் பசுமை பரப்பை அதிகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

அதேபோல் தேர்வு செய்யப்பட்ட ஏரிகளைச் சுற்றி கரைகள் பலப்படுத்துதல், நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்தல், நடைபயிற்சி தடங்கள் மற்றும் பூங்கா வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இது மட்டுமின்றி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 இடங்களில் புதிய பூங்காக்கள் அமைக்கும் பணிகளும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு கூடுதல் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டை கருத்தில் கொண்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு 25 சதவீதமும், மாநில அரசு 25 சதவீதமும் வழங்க உள்ளன. எஞ்சிய தொகையை மாநகராட்சி மற்றும் பிற நிதி ஆதாரங்கள் மூலம் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு ரூ.3000 கோடி மதிப்பிலான கூடுதல் திட்டங்களுக்கான விரிவான கருத்துருக்கள் தயாரிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Hindusthan Samachar / vidya.b