3,000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு
சிவகங்கை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் பிரவலூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், அஜய் மற்றும் அவர்களது நண்பர்கள் மதிச்செல்வம், செந்தூர், பாலசுப்பிரமணியன், மணி ஆகியோர் அளித்த தகவலின் பேரில், அழகப்பா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை இணைப் பேராசிர
Megalithic burial monuments


சிவகங்கை, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் பிரவலூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், அஜய் மற்றும் அவர்களது நண்பர்கள் மதிச்செல்வம், செந்தூர், பாலசுப்பிரமணியன், மணி ஆகியோர் அளித்த தகவலின் பேரில், அழகப்பா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பிரவலூர் கிராமத்தின் வடக்குப் பகுதியில், கடம்பன்குடி கண்மாய்க்கு தெற்கே உள்ள மேட்டுப்பகுதியில் ஏராளமான கல்வட்டங்கள் மற்றும் ஈமத்தாழிகள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து தெரிவித்த அவர், “மண் அரிப்பு காரணமாக பல ஈமத்தாழிகள் வெளிப்புறத்தில் தெளிவாகத் தெரிவதுடன், இரண்டு குத்துக்கற்கள், உடைந்த கருப்பு - சிவப்பு நிறப் பானை ஓடுகள், இரும்புக் கசடுகள் மற்றும் குவார்ட்ஸ் வகைக் கற்களும் கண்டறியப்பட்டுள்ளன.

இவை சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. பெருங்கற்காலத்தில் இறந்தவர்களின் உடல் அல்லது எலும்புச் சிதைவுகளை பெரிய மண் பானைகளில் வைத்து அடக்கம் செய்து, அதன் மீது பெரிய கற்கள் மற்றும் கற்குவைகள் அமைக்கும் வழக்கம் இருந்தது.

டால்மென் எனப்படும் கல்திட்டை, முதுமக்கள் தாழி, ஈமப்பேழை, குத்துக்கல், கல்வட்டம் உள்ளிட்ட பல வகையான ஈமச்சின்னங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. இவை தென்னிந்திய இரும்புக்காலப் பண்பாட்டுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றன” எனக் கூறினார்.

மேலும், பிரவலூர் பகுதியில் இரும்புக் கசடுகள் கிடைத்திருப்பதால், அக்கால மக்கள் இங்கு இரும்பை உருக்கி கருவிகள் தயாரித்திருக்க வாய்ப்புள்ளதாகவும், அருகிலேயே அவர்களின் வாழ்விடப்பகுதியும் இருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான ஆய்வு மற்றும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டால், மேலும் பல வரலாற்றுத் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக முனைவர் வேலாயுதராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து தொடர்ந்து கிடைக்கப்பெறும் இது போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தொன்மங்கள், தமிழர்களின் வாழ்வியலை இன்றைய தலைமுறையிடம் எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN