Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி 87 அடியை கடந்துள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் மழை மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 87.41 அடியாக பதிவாகியுள்ளது.
அணையின் மொத்த நீர் இருப்பு 49.74 டி.எம்.சி. ஆக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 120 அடி என்பது குறிப்பிடத்தக்கது.
அணைக்கு வரும் நீரின் அளவில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது.
நேற்று வினாடிக்கு 14,538 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 13,415 கன அடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து குறைந்தாலும் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே டெல்டா குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b