Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 24 ஆகஸ்ட் (ஹி.ச)
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நல்லூரிலும், சேலம் ஆவின் நிர்வாக அலுவலகம் முன்பும் இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் தங்கள் கறவை மாடுகளுடன் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், கால்நடை தீவனங்களான தவிடு, பருத்திக் கொட்டை, பிண்ணாக்கு மற்றும் கலப்புத் தீவனங்களின் விலை கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துவிட்டதாக குற்றம் சாட்டினர்.
தற்போது ஆவின் நிறுவனம் வழங்கி வரும் கொள்முதல் விலை உற்பத்திச் செலவைக் கூட ஈடுகட்ட முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையை கருத்தில் கொண்டு பசும்பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.45 ஆகவும், எருமைப் பாலுக்கு லிட்டருக்கு ரூ.60 ஆகவும் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது அவர்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.
சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி, பசும்பாலுக்கு ரூ.10 உயர்த்தி ரூ.45 வழங்க வேண்டும் என முழக்கமிட்டனர்.
மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகை பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும், தரமான ஆவின் கலப்புத் தீவனத்தை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
தனியார் நிறுவனங்கள் பசும்பாலுக்கு ரூ.42 முதல் ரூ.45 வரையும், எருமைப் பாலுக்கு அதிக விலையும் வழங்கி வரும் நிலையில், ஆவின் கொள்முதல் குறைந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஆவினுக்கு பால் வழங்காமல் பால் நிறுத்தப் போராட்டத்தை தொடரப் போவதாகவும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b