தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று சீனா பயணம்
புதுடெல்லி, 24 ஆகஸ்ட் (ஹி.ச.) இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய - சீன எல்லைப் பிரச்சினைகளுக்கான சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கே
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று சீனா பயணம்


புதுடெல்லி, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்திய - சீன எல்லைப் பிரச்சினைகளுக்கான சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அவர் பெய்ஜிங் சென்றுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் நிலவி வரும் பதற்றத்தைத் தணித்து, இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர உறவை மீண்டும் நிலைப்படுத்தும் முயற்சியாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.

இந்தப் பயணத்தின் போது அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சரும், எல்லைப் பேச்சுவார்த்தைக்கான சீனாவின் சிறப்புப் பிரதிநிதியுமான வாங் யியை சந்தித்து விரிவான ஆலோசனை நடத்த உள்ளார். இந்த சந்திப்பில் குறிப்பாக அருணாச்சலப் பிரதேச விவகாரம் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தொடர்ந்து உரிமை கோரி வரும் நிலையில், உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைதியை நிலைநாட்டுவது குறித்தும், எல்லைப் பகுதியில் ரோந்து நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது குறித்தும் இரு தரப்பும் ஆலோசிக்கும். இந்த பேச்சுவார்த்தையின் மூலம் நீண்ட நாள் இழுபறியில் உள்ள அருணாச்சலப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

மேலும், அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வர உள்ளார். அவரது வருகைக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான முக்கிய அம்சங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட உள்ளது.

தோவலின் இந்தப் பயணம், சீன அதிபரின் இந்திய வருகைக்கு முன்னோட்டமாகவும், இந்திய-சீன உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் முயற்சியாகவும் அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b