நீலகிரியில் புலியை பிடிக்கும் பணி தீவிரம் - 90 பேர் கொண்ட வனக்குழுவினர் தேடுதல் வேட்டை
கூடலூர், 24 ஆகஸ்ட் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி லாரெஸ்டன் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றித் திரியும் புலி, இரண்டு நபர்களை தாக்கி உயிரிழக்கச் செய்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர
நீலகிரியில் புலியை பிடிக்கும் பணி தீவிரம் - 90 பேர் கொண்ட வனக்குழுவினர் தேடுதல் வேட்டை


கூடலூர், 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி லாரெஸ்டன் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றித் திரியும் புலி, இரண்டு நபர்களை தாக்கி உயிரிழக்கச் செய்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

ஆட்களைக் கொன்ற புலியை விரைவில் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, புலியை பிடிக்க வனத்துறையினர் தனிப்படை அமைத்து தேடுதல் பணியை தொடங்கினர்.

இந்த தேடுதல் பணி இன்று நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக 90 பேர் கொண்ட வனத்துறையினர் மற்றும் வனக்குழுவினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். வனப்பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

புலியை உயிருடன் பிடிக்க வனத்துறையினர் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளனர். குறிப்பாக, புலி நடமாடும் என சந்தேகிக்கப்படும் 8 முக்கிய இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க சுமார் 800 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. கேமரா பதிவுகள் மூலம் புலியின் இருப்பிடத்தை உறுதி செய்து, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புலி நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாரும் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றும், வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், குழந்தைகள் மற்றும் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

புலி பிடிபடும் வரை தேடுதல் பணி இரவு பகலாக தொடரும் எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b