Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் பதவி கடந்த நான்கு மாதங்களாக காலியாக உள்ளதாகக் கூறி, விரைந்து புதிய தலைவரை நியமிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சி.பொன்னுசாமி தாக்கல் செய்த மனுவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலன் மற்றும் உரிமைகள் தொடர்பான விவகாரங்களை கண்காணிக்கும் முக்கிய அமைப்பான ஆணையத்தின் தலைவர் பதவி நீண்ட காலமாக காலியாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு எதிரான அசம்பாவித சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற விவகாரங்களில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஆணையத்துக்கு முழுமையான நிர்வாகத் தலைமையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, காலியாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத் தலைவர் பதவிக்கு விரைந்து நியமனம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 21-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / P YUVARAJ