Enter your Email Address to subscribe to our newsletters

தெலுங்கானா , 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
தெலங்கானா அரசு வெளியிட்டுள்ள அரசு ஆணை எண் 97-க்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) பந்த் நடத்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) அழைப்பு விடுத்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் பாலிடெக்னிக் கல்லூரிகளை ‘யங் இந்தியா ஸ்கில் யுனிவர்சிட்டி’யுடன் இணைக்கும் வகையில் அரசு ஆணை 97 வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஏ.பி.வி.பி. வலியுறுத்தியுள்ளது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை வலுப்படுத்தி, மாணவர்களுக்கு தேவையான கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டிய நிலையில், அவற்றை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் நடவடிக்கை தனியார்மயமாக்கலுக்கு வழிவகுக்கும் என ஏ.பி.வி.பி. குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், இந்த புதிய நடைமுறையால் பாலிடெக்னிக் மாணவர்கள் பி.டெக். படிப்பில் லேட்டரல் என்ட்ரி முறையில் சேரும் வாய்ப்பு பாதிக்கப்படக்கூடும் என மாணவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதனால் தங்களது கல்வி மற்றும் எதிர்கால வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு ஆணை 97-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஏ.பி.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது.
அரசின் முடிவை கண்டித்து நாளை நடைபெறும் மாநிலம் தழுவிய பாலிடெக்னிக் கல்லூரிகள் பந்த் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த மாணவர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் ஏ.பி.வி.பி. கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA