Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இயங்கி வரும் தனியார் கல்வி நிறுவனமான பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியின் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து காட்டுப் பகுதியில் புகுந்து விபத்துக்குள்ளானது.
பூண்டி, அதையூர், கல்சிறுநாகலூர் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களை ஏற்றிக்கொண்டு, பின்னல்வாடி, அலங்கிரி, செம்மியன்மாதேவி வழியாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது அந்த பேருந்து அப்போது பின்னல்வாடியில் உள்ள சாலையின் குறுக்கலான வளைவில் திரும்பும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 200 மீட்டர் தூரம் காட்டுப் பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சுமார் 10 மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை மீட்டனர்.
காயமடைந்த மாணவர்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN