கேரளாவில் மலைகள் இல்லையா,தமிழ்நாட்டின் கனிமவளத்தை அழிக்கத்தான் ஆட்சிக்கு வந்தீர்களா? – வேல்முருகன் கடும் கண்டனம்
சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச) கேரளாவின் கட்டுமானத் தேவைக்காக தமிழ்நாட்டிலிருந்து கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமப் பொருட்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்த தமிழக அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகியுள்ள தகவலுக்கு, தமிழக வ
Velmurugan


Bb


சென்னை, 24 ஆகஸ்ட் (ஹி.ச)

கேரளாவின் கட்டுமானத் தேவைக்காக தமிழ்நாட்டிலிருந்து கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமப் பொருட்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்த தமிழக அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகியுள்ள தகவலுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டின்போது, கேரள முதலமைச்சர் திரு. சதீசன், தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகளில் கேரளாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜயிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு கேரளாவை அந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளதாகவும் கேரள முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த தகவல் உண்மையா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

கேரளாவில் மலைகள் இல்லையா? அங்கு கல், பாறை மற்றும் கட்டுமானத் தேவைக்கான கனிம வளங்கள் இல்லையா? கேரளாவின் வளர்ச்சிக்காக தமிழ்நாட்டின் மலைகளையும் பாறைகளையும் ஏன் அழிக்க வேண்டும் என வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டின் கனிமவளம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக இயற்கையால் உருவாக்கப்பட்ட அரிய வளம். ஒருமுறை மலைகளையும் பாறைகளையும் அகழ்ந்து எடுத்துவிட்டால் அவை மீண்டும் உருவாகப் போவதில்லை. ஒரு குவாரியில் இருந்து கல் மட்டும் வெளியேறுவதில்லை; மலையின் இயற்கைச் சமநிலை சிதைக்கப்படுகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகள் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டம், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகின்றன. இதன் இறுதியில் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்குள்ளேயே சாலை, பாலம், வீடமைப்பு, தொழில்துறை மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளுக்கான கட்டுமான மூலப்பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் உள்நாட்டுத் தேவையை முழுமையாக உறுதி செய்யாமல் பிற மாநிலங்களின் கட்டுமானத் தேவைக்காக இயற்கை வளங்களை எடுத்துச் செல்வது தொலைநோக்கான நிர்வாகமாக இருக்க முடியாது என்றும் வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.

அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு பேணப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், நல்லுறவு என்ற பெயரில் தமிழ்நாட்டின் மலைகளை இழக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா என எந்த அண்டை மாநிலத்தின் கட்டுமானத் தேவையை நிறைவேற்றுவதற்காகவும், தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறைகளின் வாழ்வுரிமையை பாதிக்கும் வகையில் கனிம வளங்களை தொடர்ந்து எடுத்துச் செல்வதை ஏற்க முடியாது என வேல்முருகன் கூறியுள்ளார்.

எனவே, கேரளாவுக்கு தனிப்பட்ட விலக்கு அளிப்பது தொடர்பான பரிசீலனையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழகத்தின் உள்நாட்டுத் தேவையை முதலில் கணக்கில் கொண்டு, கனிம வளங்களின் இருப்பு, சுற்றுச்சூழல் தாக்கம், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருங்காலத் தலைமுறைகளின் தேவைகளை உறுதி செய்த பின்னரே கனிமவளப் பயன்பாடு தொடர்பாக எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்வதில் விதிவிலக்குகளுக்கு இடமளிக்காமல், சட்டவிரோதக் குவாரிகள், அதிகப்படியான கனிம அகழ்வு மற்றும் கனிமவளக் கடத்தலை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழக அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ