Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அம்மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய முக்கிய அணைகளில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நீர் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைகிறது.
கடந்த சில நாட்களாக 8,000 முதல் 10,000 கன அடி வரை இருந்த நீர்வரத்து, திடீரென அதிகரித்து தற்போது 13,000 கன அடியாக தொடர்கிறது.
நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, ஐந்தருவி, சினிஃபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஆற்றில் நீரின் வேகமும், சுழற்சியும் அதிகமாக காணப்படுகிறது.
இந்த சூழலில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தருமபுரி மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கும், அருவிகளில் குளிப்பதற்கும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 9-வது நாளாக நீட்டிக்கப்படுகிறது. தடையை மீறி யாரும் ஆற்றில் இறங்கக் கூடாது எனவும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆற்றங்கரையோரம் பாதுகாப்பு பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நீர்வரத்து சீரான நிலைக்கு திரும்பிய பின்னரே பரிசல் இயக்கவும், குளிக்கவும் அனுமதி வழங்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b