தொடர் கனமழை எச்சரிக்கை - தெற்கு தைவானில் அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தைவான், 24 ஆகஸ்ட் (ஹி.ச.) கடந்த சில நாட்களாக தெற்கு தைவானின் மேல் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக இன்று அலுவலகங்கள் மற்றும் பள
தொடர் கனமழை எச்சரிக்கை -  தெற்கு தைவானில் அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


தைவான், 24 ஆகஸ்ட் (ஹி.ச.)

கடந்த சில நாட்களாக தெற்கு தைவானின் மேல் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக இன்று அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. சில ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வார இறுதியில் தீவின் வடக்குப் பகுதியை புயல் தாக்கும் என்பதால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாற்பது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் காவோசியுங் மற்றும் தைனான் ஆகிய இரு நகரங்களிலும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளை மூட உள்ளூர் நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.

அதேபோல் பிங்டுங், சியாயி மாவட்டங்களிலும், மலைப்பாங்கான கிழக்குப் பகுதியில் உள்ள தைதுங், ஹுவாலியன் மாவட்டங்களிலும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஐந்து நாட்களில் பெய்யக்கூடிய மொத்த மழைப்பொழிவு 1.3 மீட்டர் அதாவது 4.3 அடியை தாண்டும் என்று காவோசியுங் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது அந்நகரம் ஓராண்டில் எதிர்பார்க்கும் மொத்த மழையில் கிட்டத்தட்ட பாதி அளவாகும்.

தைவான் ரயில்வே நிர்வாகம், பிரதான கிழக்கு கடற்கரை வழித்தடத்திலும், காவோசியுங் மற்றும் தைதுங் இடையேயான ரயில் சேவைகளிலும் பாதிப்பு இருக்கும் என்று அறிவித்துள்ளது.

விரைவு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, உள்ளூர் ரயில்கள் வானிலை நிலவரத்தைப் பொறுத்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றால், தயவுசெய்து வெளியே செல்ல வேண்டாம் என்று தைதுங் மாவட்ட தலைவர் ஏப்ரல் யாவ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, தற்போது ஜப்பானின் தெற்கு ஒகினாவா பகுதியை நோக்கி நகர்ந்து வரும் சௌடெல் புயல், வெள்ளிக்கிழமை அதிகாலை தைவானின் வடக்குப் பகுதியை கடந்து சென்று, பின்னர் சீனாவின் கிழக்கு கடற்கரையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தைவானின் மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b