Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற்றால் கூட்டணி அரசுக்கு எதிராக மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்குவார்கள் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அவர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
அப்போது ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது:-
உள்ளாட்சித் தேர்தல்கள் வெற்றி, தோல்வியை மட்டும் தீர்மானிப்பவை அல்ல. கட்சிக்காக களத்தில் தொடர்ந்து உழைத்து வரும் தொண்டர்களுக்கு துணை நிற்க வேண்டிய முக்கியமான காலகட்டம் இது. எனவே ஒவ்வொரு இடத்திலும் திறமையும், மக்களிடம் செல்வாக்கும் கொண்ட வலுவான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் நடைபெற்ற எம்.பி.டி.சி., ஜெட்பிடிசி மற்றும் நகராட்சி தேர்தல்களில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அத்துமீறல்களைப் பார்த்திருக்கிறோம். இந்த முறை எந்தத் தொகுதியிலும் போட்டியின்றி தேர்தல் நடைபெறுவதற்கு இடமளிக்கக்கூடாது.
தேவைப்பட்டால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைக்கூட தேர்தல் களத்தில் இறக்க வேண்டும்.
எந்த இடத்திலாவது போட்டியின்றி தேர்தல் நடைபெற்றால், அந்தப் பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் எதிர்காலத்தில் சட்டமன்ற வேட்பாளர்களாகத் தொடர முடியாது.
15 லட்சம் அடையாள அட்டைகள்
கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் 14 முதல் 15 லட்சம் கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டைகள் தயாராகியுள்ளன.
செப்டம்பர் 5-ந் தேதி முதல் மண்டலம், தொகுதி மற்றும் மாவட்ட அளவில் கூட்டங்கள் நடத்தி இந்த அடையாள அட்டைகள் தொண்டர்களுக்கு வழங்கப்படும்.
“வென்னுபோட்டு கட்சி–வென்னுபோட்டு ஆட்சி” என்ற முழக்கத்துடன் கிராம அளவில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கும் தற்போதைய கூட்டணி ஆட்சிக்கும் இடையிலான வித்தியாசங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
காவல்துறை நடுநிலை
கட்சித் தொண்டர்களுக்கு எதிராக நடைபெறும் நடவடிக்கைகளை சட்டரீதியாக எதிர்கொள்ளும் வகையில் தொகுதி முதல் மாநில அளவு வரை சட்டம் மற்றும் ஊடகப் பிரிவுகளை வலுப்படுத்த வேண்டும். தேவையான வழக்குகளை உயர்நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லும் வகையில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்த வேண்டும்.
காவல்துறையினர் எந்தவித அரசியல் அழுத்தத்துக்கும் இடமளிக்காமல் நியாயமாகவும், நடுநிலையாகவும் செயல்பட வேண்டும். அரசியல் அழுத்தத்தால் சட்டவிரோதமாக செயல்படும் அதிகாரிகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு, எதிர்காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சமூக வலைதளங்களை முழுமையாகப் பயன்படுத்தி, “ஜெகன் 2.0 சூப்பர் ஆப்”, யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட தளங்கள் மூலம் கட்சியின் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
கட்சித் தலைவர்கள் தங்களது தனிப்பட்ட ஈகோ மற்றும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, அடுத்த 60 முதல் 70 நாட்கள் தங்களது தொகுதிகளிலேயே தங்கி உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக தீவிரமாகப் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA