Enter your Email Address to subscribe to our newsletters

பல்லாரி , 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷ் பல்லாரி மாவட்டம் குடிதினிக்கு சென்றார். அவருக்கு அங்குள்ள தெலுங்கு மக்கள், இளைஞர்கள் மற்றும் தெலுங்குதேசம் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பெரிய மாலை அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும் தங்கள் வரவேற்பை வெளிப்படுத்தினர்.
பின்னர் தெலுங்கு மக்களிடையே நாரா லோகேஷ் பேசியதாவது:-
2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டபோது எங்கள் குடும்பம் மிகுந்த மனவேதனை அடைந்தது. அந்த இக்கட்டான நேரத்தில் பல்லாரி தெலுங்கு மக்கள் நடத்திய போராட்டங்களும், எங்களுக்கு அளித்த ஆதரவும் மிகுந்த மன தைரியத்தை அளித்தன. உலகம் முழுவதும் உள்ள தெலுங்கு மக்களுக்கும் அது புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது.
அந்த கடினமான காலகட்டத்தில் பல்லாரி மக்கள் எங்களுக்கு துணையாக நின்றதை வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன். உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு துணையாக நிற்பேன்.
உலகம் முழுவதும் உள்ள தெலுங்கு மக்களின் நலனுக்காக பாடுபடுவதையே தெலுங்குதேசம் கட்சியின் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளோம். மறைந்த என்.டி.ராமாராவ் இதனை அடிப்படையாக கொண்டே தெலுங்குதேசம் கட்சியை தொடங்கினார்.
உத்தரகாண்ட் பேரழிவின்போது அங்கு சிக்கியவர்களை சந்திரபாபு நாயுடு தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுத்து மீட்டார்.
ஆந்திரப் பிரதேசமும் கர்நாடகாவும் சகோதர மாநிலங்களைப் போல் இணைந்து செயல்பட்டு, தென்னிந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். கடந்த காலங்களில் சந்திரபாபு நாயுடுவுக்கும், எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் இடையே நிலவிய ஆரோக்கியமான போட்டி, ஐதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களின் வேகமான வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
சமீபத்தில் நடைபெற்ற முதல்-மந்திரிகள் கூட்டத்தில், கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் மற்றும் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆகியோர் இரு மாநிலங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் நதிகள் இணைப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சாதகமான கருத்தை தெரிவித்தார்.
பல்லாரியில் தெலுங்கு மக்கள் தங்களது சொந்த நிதியில் ‘அன்னா கேன்டீன்’ நடத்தி வருவது பாராட்டுக்குரியது.
அதேபோல் என்.டி.ஆர். சர்க்கிள் அமைப்பதற்கான அரசாணையை பெற்றுள்ளதற்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் அங்கு என்.டி.ஆர். சிலை அமைக்க தேவையான முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும்.
பல்லாரி தெலுங்கு மக்கள் ஆந்திரப் பிரதேசத்தின் மறுகட்டமைப்பிலும் பங்கெடுக்க வேண்டும்.
அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க ஆந்திரப் பிரதேச நிதி அமைச்சர் பையாவுல கேசவ் தொடர்ந்து தயாராக இருப்பார்.
இவ்வாறு நாரா லோகேஷ் பேசினார்.
நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச நிதி அமைச்சர் பையாவுல கேசவ், எம்.எல்.ஏ. தக்குபாட்டி வெங்கடபிரசாத், உள்ளூர் தெலுங்குதேசம் கட்சி நிர்வாகிகள் ராமு, அனூப் குமார் மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA