அமெரிக்க பயண அனுமதி மறுப்பு விவகாரம் - பாஜக எம்எல்ஏ அல்லேட்டி மகேஷ்வர் ரெட்டி கண்டனம்
ஹைதராபாத், 25 ஆகஸ்ட் (ஹி.ச.) தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் அமெரிக்க அதிகாரப்பூர்வ பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்த விவகாரம் தெலுங்கானா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மாநில தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற பத்திர
அமெரிக்க பயண அனுமதி மறுப்பு விவகாரம் - பாஜக எம்எல்ஏ அல்லேட்டி மகேஷ்வர் ரெட்டி கண்டனம்


ஹைதராபாத், 25 ஆகஸ்ட் (ஹி.ச.)

தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் அமெரிக்க அதிகாரப்பூர்வ பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்த விவகாரம் தெலுங்கானா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

மாநில தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் முதல்வர் ரேவந்த் ரெட்டி, தனது அமெரிக்க பயணத்திற்கு அனுமதி மறுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முடிவை கேள்விக்குள்ளாக்கி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இங்கிலாந்து பயணத்திற்கு அனுமதி அளித்துவிட்டு, அமெரிக்க பயணத்திற்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

வெளிநாட்டுப் பயணத்திற்கு தேவையான அனைத்து விவரங்களையும் மாநில அரசு வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தெலுங்கானா பாஜக தலைமை இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. முதல்வரின் அமெரிக்க பயணத்திற்கு அரசியல் அனுமதி மறுக்கப்பட்டதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும், இது நடைமுறைத் தேவைகள் மற்றும் ஒழுங்குமுறை விதிமுறைகளுடன் தொடர்புடையது என்றும் பாஜக மாநிலத் தலைவர் என். ராமச்சந்தர் ராவ் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், தெலுங்கானாவிற்கு உலகளாவிய கல்வி நிறுவனங்களை ஈர்க்கும் நோக்கில் திட்டமிடப்பட்டிருந்த 'தெலுங்கானா ரைசிங்' தூதுக்குழுவின் அமெரிக்க பயணம், வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்காததால் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

மத்திய அரசை குற்றம்சாட்டி முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் அல்லேட்டி மகேஷ்வர் ரெட்டி, முதல்வரின் பேச்சு நான்கு கோடி தெலுங்கானா மக்களை அவமதிக்கும் செயல் என்று கடுமையாக சாடியுள்ளார்.

ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அல்லேட்டி மகேஷ்வர் ரெட்டி கூறுகையில்,

விசா நிராகரிப்பு குறித்தும், மத்திய அரசு மீது நீங்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் நீங்கள் பேசிய விதம் தெலுங்கானாவின் நான்கு கோடி மக்களை அவமதிப்பதாகும். உங்கள் விசா ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

தெலுங்கானா மக்களின் வரிப்பணத்தில் நீங்கள் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறீர்கள் என்றால், முழு பயணத் திட்டத்தையும் பகிர்வது உங்கள் பொறுப்பு. ஆனால் நீங்கள் பயணத் திட்டத்தை மறைத்துவிட்டீர்கள். இதற்கான காரணத்தை முதலில் விளக்க வேண்டும். உங்கள் விசா ரத்து செய்யப்பட்டதும், அதன் விளைவாக உங்கள் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டதும் தெலுங்கானா மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம். இதற்கு நீங்கள் தெலுங்கானா மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்

என்று வலியுறுத்தினார்.

முதல்வரின் பயணத் திட்டம் வெளிப்படையாக இல்லை என்றும், பொது நிதியில் மேற்கொள்ளப்படும் பயணம் குறித்த முழு விவரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை முதல்வருக்கு உண்டு என்றும் பாஜக தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b