Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
கொளத்தூர் தேர்தல் முடிவுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு - அவசர விசாரணைக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார்.
இந்த தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியை எதிர்த்து நேற்று (ஆகஸ்ட் 24) மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தொகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களில் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
குறிப்பாக 1, 17, 28, 32, 75, 78, 79, 84, 87, 112, 122, 157, 170 ஆகிய வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்தபோது பதிவான வாக்குகளுக்கும் விவிபேட் ஒப்புகை சீட்டுகளுக்கும் இடையே வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், மென்பொருள் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
எனவே கொளத்தூர் தொகுதியின் 100 சதவீத விவிபேட் ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவித்து தன்னை வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இந்த வழக்கு வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று
(ஆக. 25) தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் முன்னிலையில், மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் முறையிட்டார்.
முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b