Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
புதுச்சேரி சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசுத் திட்டங்களை தவெக எம்எல்ஏ ராமு புகழ்ந்து பேசியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய தவெக எம்எல்ஏ ராமு, தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் செயல்படுத்தி வரும் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சுட்டிக்காட்டி பாராட்டு தெரிவித்தார். குறிப்பாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் பேசினார்.
அப்போது குறுக்கிட்ட தற்காலிக சபாநாயகர் அன்பழகன், புதுச்சேரி அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை சுட்டிக்காட்டி பதிலளித்தார். புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா என கேள்வி எழுப்பினார்.
இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் விவாதம் மற்றும் சலசலப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் திட்டங்களை தவெக எம்எல்ஏ சட்டப்பேரவையில் புகழ்ந்து பேசியதும், அதற்கு தற்காலிக சபாநாயகர் கேள்வி எழுப்பியதும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam