Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச)
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வணிக வளாகம் அமைக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து, கடலூரைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மஞ்சக்குப்பம் மைதானத்தில் திட்டப் பணிகளை மேற்கொள்ள கடலூர் மாநகராட்சிக்கு அனுமதி அளித்துள்ளது.
வணிக வளாகத்தில் உள்ள கடைகள் மூலம் கிடைக்கும் வருமானம், விளையாட்டு மைதானத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கடைகள் மைதானத்தைச் சுற்றுச்சுவர் போல அமைக்கப்படும் என்பதால், விளையாட்டு மைதானத்தின் பயன்பாட்டிற்கு எந்தவித இடையூறும் ஏற்படாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ