தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரும் மனு - விஜய், ஆதவ் அர்ஜூனா தரப்புக்கு ரூ.50,000 அபராதம் எச்சரிக்கை
சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.) தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குள் மனுத்தாக்கல் செய்யாவிட்டால், தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தரப்புக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சர
சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை, 25 ஆகஸ்ட் (ஹி.ச.)

தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குள் மனுத்தாக்கல் செய்யாவிட்டால், தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தரப்புக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்குகள் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் விஜய் தரப்பில் கோரப்பட்டது.

ஆனால், அவகாசம் வழங்க மறுத்த நீதிபதி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86-வது பிரிவின்படி தேர்தல் வழக்குகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டியுள்ளது என தெரிவித்தார். மேலும், ஏற்கனவே கூடுதல் அவகாசம் வழங்கப்படாது எனத் தெரிவித்திருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

இதே கோரிக்கையை முன்வைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தரப்புக்கும் இரண்டு வார அவகாசம் வழங்க மறுத்த நீதிபதி, ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குள் நிராகரிப்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

அதற்குள் மனுத்தாக்கல் செய்யத் தவறினால், விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனா தரப்புக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதி எச்சரித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam