Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 25 ஆகஸ்ட் (ஹி.ச)
ஈரோட்டில் சாலையின் நடுவே தனியார் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றியதாக கூறப்படும் விவகாரத்தில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனியார் மற்றும் மினி பேருந்து ஓட்டுநர்கள் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துவதுடன், சாலையின் நடுவே பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சவிதா பகுதியில் RKM என்ற தனியார் நகரப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது, சாலையின் நடுவே பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றியதாக கூறப்படுகிறது.
இதனால் பேருந்தின் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சாலையின் நடுவே ஏன் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றுகிறீர்கள் என ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு ஓட்டுநர், நான் அப்படித்தான் ஏற்றுவேன் என ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் பேருந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை பின்தொடர்ந்து மணிக்கூண்டு பகுதியில் இருசக்கர வாகனங்களை குறுக்கே நிறுத்தி பேருந்தை வழிமறித்தனர்.
தொடர்ந்து, ஓட்டுநரை கீழே இறங்குமாறு கூறிய பொதுமக்கள், தங்களிடம் ஒருமையில் பேசியது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதனிடையே, சாலையின் நடுவே பேருந்தை நிறுத்தவில்லை என ஓட்டுநர் கூறியதாக தெரிகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர், தனியார் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
சாலையின் நடுவே பேருந்துகளை நிறுத்துவது, அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் தனியார் மற்றும் மினி பேருந்து ஓட்டுநர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P