Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ, 25 ஆகஸ்ட் (ஹி.ச)
உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் போலி சரக்கு மற்றும் சேவை வரி உள்ளீட்டு வரி வரவு மோசடி தொடர்பாக இறக்குமதி - ஏற்றுமதி நிறுவனம் ஒன்றின் மீது அமலாக்கத்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ரூ.3.6 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
அமலாக்கத்துறையின் லக்னோ மண்டல அலுவலகம், சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டம் 2002-ன் கீழ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நேற்று தொடங்கிய இந்த சோதனை 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
உத்தரப்பிரதேசத்தில் முசாபர்நகர், காசியாபாத் மற்றும் ஹரியானாவில் பரிதாபாத் ஆகிய பகுதிகளில் உள்ள ஒன்பது இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் நேற்று மாலை நடைபெற்ற சோதனையின் போது மட்டும் முசாபர்நகரில் உள்ள ஒரு வளாகத்திலும், காசியாபாத்தில் உள்ள எஃகு உற்பத்தி ஆலை ஒன்றிலும் இருந்து ரூ.1.1 கோடிக்கும் அதிகமான ரொக்கம் கைப்பற்றப்பட்டது. தற்போது சோதனைகள் நிறைவடைந்துள்ளன.
இந்த மோசடி குறித்து விசாரணையில் தெரியவந்த தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. சம்பந்தப்பட்ட இறக்குமதி - ஏற்றுமதி நிறுவனம் எந்தவிதமான சரக்கு போக்குவரத்தும் இன்றி, போலியான விலைப்பட்டியல்கள் மற்றும் மின்னணு வழித்தட ரசீதுகளை உருவாக்கி போலி உள்ளீட்டு வரி வரவை பெற்று, அதனை மற்ற நிறுவனங்களுக்கு கைமாற்றி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை ஏய்ப்பு செய்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் பல போலியான மற்றும் இல்லாத நிறுவனங்களின் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அதன் வழியே பணம் சுழற்சி முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டு, உடனடியாக ரொக்கமாக எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பணத்தை பல அடுக்குகளாக மாற்றி தடயத்தை மறைக்கும் முயற்சியும் நடந்துள்ளது.
ஜி.எஸ்.டி துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் சுமார் ரூ.9.63 கோடி மதிப்பிலான உள்ளீட்டு வரி வரவை மோசடியாக பெற்றுள்ளதும், ரூ.10.28 கோடி மதிப்பிலான வரி வரவை மற்ற நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக கைமாற்றியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அரசு கருவூலத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொகை சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றத்தின் மூலம் பெறப்பட்ட வருமானமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றத்தின் மூலம் பெறப்பட்ட பணத்தின் பாதையை கண்டறிவதற்கும், இந்த மோசடி வலைப்பின்னலில் பயனடைந்த மேலும் பலரை அடையாளம் காண்பதற்கும், மோசடி தொடர்பான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை சேகரிப்பதற்கும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Hindusthan Samachar / vidya.b