Enter your Email Address to subscribe to our newsletters

ஜம்மு காஷ்மீர், 25 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஜம்மு காஷ்மீரில் மின் கட்டணம் சுமார் 7 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, முதலமைச்சர் உமர் அப்துல்லா தலைமையிலான அரசின் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
தேர்தலின்போது 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என உமர் அப்துல்லா அளித்த வாக்குறுதியை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சிகள், தற்போது அதற்கு நேர்மாறாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக விமர்சித்துள்ளன.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் உமர் அப்துல்லா, பணவீக்கம், அதிகரித்து வரும் மின்சார கொள்முதல் செலவு மற்றும் மின் துறையில் நிலவும் கட்டமைப்பு சார்ந்த நிதிச்சுமைகள் காரணமாக கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாக இருந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், தங்களை விமர்சிப்பவர்களும் முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் எனக் குறிப்பிட்ட அவர், PDP-பாஜக கூட்டணி ஆட்சியில் மின் கட்டணம் 14 சதவீதம் உயர்த்தப்பட்டதாகவும், அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 15 சதவீத உயர்வு செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தங்கள் அரசு சுமார் 6 சதவீதம் மட்டுமே கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P